×

இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவு: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தின் போது கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 675 புள்ளிகள் வரை குறைந்து, 37 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே சென்றதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அமெரிக்காவில் வங்கி வட்டி விகிதம் கால் சதவீதம் குறைக்கப்பட்டாலும், வட்டி குறைப்பு தொடர வாய்ப்பில்லை என அந்நாட்டு ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதேபோல சீன இறக்குமதிகளுக்கு புதிதாக 10 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் மீண்டும் தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காரணங்களால் அமெரிக்க பங்கு சந்தைகளும், அதன் தொடர்ச்சியாக இந்திய பங்குச்சந்தைகளும் சரிவைச் சந்தித்தன. இந்த நிலை ஆசிய பங்குச்சந்தைகளில் இன்றும் தொடர்கிறது.

மேலும் சீன கரன்சியான யுவானின் மதிப்பு 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்கள், தங்கம் என பாதுகாப்பான முதலீடுகளை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த பின்னணியில் இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை பெருமளவில் விற்றுத் தள்ளுவதால், சரிவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரமும் பங்குச்சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை வர்த்தகத்தின்போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், ஒரு கட்டத்தில் 675 புள்ளிகள் அளவுக்கு சரிந்து 36,443 அளவுக்கு கீழே சென்றது. இதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 149 புள்ளிகள் அளவுக்கு குறைந்து 10 ஆயிரத்து 848 புள்ளிகள் அளவுக்கு குறைந்தது. பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Indian,stock market,plummets today, Investors,shock
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்