×

55 வயதில் வேலை பறித்தால் குடும்பமே நிலைகுலையும் : முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்

மத்திய பாஜ அரசு மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. கடந்த முறை ஆட்சியில் பல விமர்சனங்களுக்கு ஆளானது; ஆனால், கடந்த நாடாளுமன்றத்தை விட இந்த முறை பாஜ அரசு மிகப்பெரிய பலத்தோடு ஆட்சிக்கு வந்து உள்ளது. அதாவது யாரும் தட்டிக் கேட்காத அளவிற்கு மிகப்பெரிய மிருகப்பலத்தோடு இந்த முறை மத்தியில் பாஜ ஆட்சி அமைந்துள்ளது.  இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பாஜ அரசு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வர துடிக்கிறது. இப்போது எடுத்தும் வருகிறது. படிப்படியாக அசுர வேகத்தில் அரசு பணிகளை தனியார் மயமாக்கி வருகிறது. பல வேலைகளை அவுட்சோர்சிங் மூலம் செய்து ெகாள்கிறது. நிரந்தர பணிகளுக்கு மூடுவிழா காண்கிறது. பாஜ அரசு தங்களுடைய சொந்தக் கொள்கையை புகுத்த தயாராகி விட்டது. அதாவது தான் சார்ந்துள்ள ஆர்எஸ்எஸ் கொள்கையை நடைமுறைப்படுத்த எல்லா முயற்சியும் செய்து கொண்டு வருகின்றது பாஜ அரசு. குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கும் போது 1.50 லட்சம் கோடி பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்று நாடாளுமன்றத்தில் அறிவித்துவிட்டனர். மற்றொரு பக்கம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் 60 வயது வரையும், மாநில அரசில் 58 வரை பணிபுரியலாம் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில், ரயில்வே போன்ற பொதுத்துறைகளில் உள்ள லட்சக்கணக்கில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. தற்காலிக ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்களை நியமனம் செய்து காலி பணியிடங்களை நிரப்பும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதாவது, நிரந்தர பணியிடம் என்பதை ஓசைப்படாமல் மாற்றி வருகிறது. மத்திய அரசின் இந்த மோசமான பொதுத்துறை தனியார் மயமாக்குவது, காலிப்பணியிடங்களை நிரப்பாமல் காலியாக வைத்திருப்பது, ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பது போன்றவற்றை கண்டித்து தொழிலாளர்கள் ஒன்று கூடி போராட தொடங்கியுள்ளனர். அந்த போராட்டத்தை நேரடியாக ஒடுக்க முடியாத சூழ்நிலையில் 50 வயதுக்கு மேற்ப்பட்டவர்களை அவர்கள் செய்யும் பணிகளை நேரடியாக கவனித்து அவர்கள் சரியாக பணி செய்யவில்லை என்றால் அவர்களை பணிநீக்கம் செய்வது என்ற முறையை கையாள தொடங்கியிருப்பது சரியல்ல.

இப்படி செய்வதன் மூலம் தொழிலாளர்களை அச்சுறுத்தவும், தொழில் சங்க தலைவர்களை அச்சுறுத்தவும் செய்ய  முடிகிறது. அதே சமயம், தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த சங்கங்கள் முற்படுகிறது. அப்படி முயற்சி செய்வதை அரசு விரும்பவில்லை. மொத்தத்தில் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு கட்சி அதிகாரத்திற்கு வந்து விட்ட காரணத்தால் இத்தகைய பாதிப்புகள் எல்லாம் ஏற்படுகிறது.
இதை தொழிலாளர்கள் மற்றவர்கள் அனைவரும் இணைந்து ஒன்றுபட்டு ஜனநாயகத்தையும், தொழிலாளர்கள் உரிமையை காக்க வேண்டும் என்ற முறையில் ஒன்றுபட்டு இணைந்து போராட வேண்டும். பொதுவாக 50-60 வயதில் தான் குடும்பத்தலைவன் என்ற முறையில் பல்வேறு பொறுப்புகள் உள்ளது. அந்த காலகட்டத்தில் அந்த ஊழியர்கள் தங்களது பிள்ளைகளின் படிப்புகள், திருமணம், வேலை வாங்கி கொடுப்பது போன்று நிறைவேற்ற வேண்டியது பொறுப்புகள் நிறைய உள்ளது. அப்படிப்பட்ட நேரத்தில் பழிவாங்குவது என்பது அந்த குடும்பத்தையே நிலைகுலைய செய்யும் நடவடிக்கை ஆகும்.

Tags : Mutharasan, Communist Party Secretary , State of India
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...