×

தொடரை வென்றது இந்தியா ஏ

போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் (4 நாள், அங்கீகாரமற்றது), 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஏ அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி முதல் இன்னிங்சில் 318 ரன் குவித்தது. இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 190 ரன்னுக்கு சுருண்டது.
இதைத் தொடர்ந்து, 128 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 149 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அம்ப்ரிஸ் 71 ரன், பிளாக்வுட் 31 ரன் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
278 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் பிரியங்க் பாஞ்ச்சால் 68, மயாங்க் அகர்வால் 81 ரன் விளாசினர்.

ஈஸ்வரன் 16, அன்மோல்பிரீத் 4 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து வெற்றியை உறுதி செய்தனர். இந்தியா ஏ அணி 79.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன் குவித்து வென்றது. ஈஸ்வரன் 59 ரன் (134 பந்து, 7 பவுண்டரி), அன்மோல்பிரீத் 51 ரன்னுடன் (86 பந்து, 8 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிரியங்க் பாஞ்ச்சால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில், இந்தியா ஏ 2-0 என முன்னிலை வகிக்க, கடைசி டெஸ்ட் டிரினிடாடில் நாளை தொடங்குகிறது.




Tags : India, won, the, series
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...