×

புதர் மண்டிய உதயகிரி கோட்டை... ஆக்ரமிப்பாளர்கள் பிடியில் மருந்துகோட்டை குமரியில் புராதன சின்னங்கள் அழிகிறது : சுற்றுலா பயணிகள் வேதனை

தக்கலை: குமரி மாவட்டம் தக்கலை சுற்றுவட்டாரத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க பழங்கால கோட்டைகள் இன்று பராமரிப்பு இன்றி அழிந்து வருகின்றன.உதயகிரிகோட்டை: தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி பகுதியில் உதயகிரி கோட்டை அமைந்துள்ளது. சுமார் 98 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கோட்டைக்குள் இன்று வனத்துறை சார்பில் மான்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நான்கு வாசல்களை கொண்ட இந்த கோட்டை வளாகத்தில் மலைக்குன்று, டிலெனாய் நினைவிடம் உள்ளது.வேணாட்டு மன்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சியின் போது 1741ல் குளச்சல் போர் நடந்தது. குளச்சல் துறைமுகத்தை கைப்பற்ற நடந்த போரில் டச்சுப்படை தளபதியாக இருந்தவர் ஹாலந்தில் பிறந்த டிலெனாய். இப்போரில் டச்சுப்படை மன்னர் மார்த்தாண்ட வர்மா படையால் முறியடிக்கப்பட்டது. டிலெனாய் உள்ளிட்ட டச்சு வீரர்கள் கைது செய்து உதயகிரி கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். அப்போது டிலெனாயின் வீரமும், திறமையும் மன்னரை கவர்ந்தது. இதனால் டிலெனாயை தனது படைத்தளபதியாக நியமித்தார். டிலெனாய் பீரங்கிகள், வெடிமருந்துகள் தயாரித்து  திருவிதாங்கூர் படையை நவீனமாக்கினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தை குமரி முதல் கொச்சி வரை விரிவடைய செய்தார். இப்படி தளபதியாக பணியாற்றி திருவிதாங்கூர் மன்னருக்கு விசுவாசமாக இருந்த டிலெனாய் 1777ல் காலமானார்.டிலெனாய் மற்றும் அவரது குடும்பத்தினருடைய கல்லறைகள் உதயகிரி கோட்டை வளாகத்தில் உள்ளது. இந்த நினைவிடம் சர்ச் போன்ற அமைப்பு கொண்ட கட்டிட வளாகத்தில் உள்ளது. டச்சு படை வீரனாக வந்து திருவிதாங்கூர் படையை நவீன
மாக்கிய டிலெனாய் நினைவிடம் மற்றும் உதயகிரி கோட்டைச்சுவர் தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இது 1966ம் வருடத்திய புராதன சின்னங்கள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

வரலாற்று பக்கங்களில் இடம் பெற்ற டிலெனாய் நினைவிடத்தை வெளிநாட்டு பயணிகள் அவ்வப்போது பார்த்து செல்வதுண்டு. இத்தகைய பெருமை வாய்ந்த டிலெனாய் நினைவிடம் இன்று போதிய பராமரிப்பின்றி உள்ளது. நினைவிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் புற்கள் முளைத்து மறைந்து போகும் அளவில் காணப்படுகிறது. புற்கள் உயரமாக கட்டிடத்தை சுற்றிலும் வளர்ந்திருப்பதால் விஷ ஜந்துக்களுக்கு வசதியாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விஷ ஜந்துக்களால் பாதிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும் கட்டிடத்தின் சுவர்களில் செடிகள் வளர்ந்து  விரிசல் ஏற்படும் நிலை காணப்படுகிறது. இங்கு சில ஆண்டுகள் முன்பு வரை தொல்லியல் துறை சார்பில் வாட்ச்மேன் ஒருவர் இருந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு வாட்ச்மேன் பணியிடம் காலியாக உள்ளது.
மருந்துக் கோட்டை: தக்கலையில் இருந்து தடிக்காரண்கோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது மருந்துக்கோட்டை. கடல் மட்டத்தில் இருந்து 895 அடி உரத்தில் அமைந்துள்ள இக்கோட்டையின் பரப்பளவு 9 ஏக்கராகும். இதில் மேல் பரப்பு மட்டுமே 2.3 ஏக்கர். மன்னர் மார்த்தாண்டவர்மா காலத்தில் கட்டப்பட்ட இக்கோட்டை குறித்த பல் வேறு தகவல்கள் உண்டு. வெடி மருந்து தயாரிக்க பயன்படுத்தயதாகவும், போரில் காயமடைந்த வீரர்களுக்கு மருந்துகள் தயாரித்து சிகிட்சை அளிக்க பயன்படுத்தியதாகவும் கூறுவர். மேலும் எதிரிகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட கோட்டை என்ற தகவலும் உண்டு.

இப்படி வரலாற்று பின்னணி கொண்ட இக்கோட்டையில் 5 கொத்தளம், கல் மண்டபம், அம்மி, உரல் உள்ளிட்டவைகள் உண்டு. புற்கள் வளர்ந்து புதராக மண்டிப்போன இக்கோட்டைக்கு செல்ல முறையான வழிகள் இல்லை. கோட்டை வாசலுக்கு செல்வதற்கான வழி அடைக்கப்பட்டுள்ளது. காலம் காலமாக ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவிக்கும் இக்கோட்டையை இது வரை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கோட்டையின் கீழ் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு மலைக்குன்று தரைமட்டமாக்கப்பட்டு வருகிறது. இயற்கையான மலைக்குன்று அதன் தனித்தன்மையை இழந்து விட்டது. அவ்வப்போது ஆட்சியாளர்கள் இந்த கோட்டையினை பார்த்து விட்டு செல்வதோடு சரி. இந்த கோட்டையினை சரி செய்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் விடப்பட்டும் கண்டு கொள்ளப்படவில்லை.மையக்கோட்டை: இந்த கோட்டை மருந்துக்கோட்டையில் இருந்து சானல் வழியாக சென்றால் பார்க்க இயலும். சுமார் 6 ஏக்கர்  பரப்புடைய இந்த கோட்டை மார்த்தாண்டவர்மா காலத்தில் பயன்படுத்தியதாகும். குற்றவாளிகளை தூக்கிலிடும் தலமாகவும், மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களை எரியூட்டும் தலமாகவும் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. இன்றும் சாம்பல் திட்டுக்கள் கோட்டைக்குள் பார்க்க முடியும். இந்த கோட்டையும் முறையான பராமரிப்பின்றி அழியத் தொடங்கியுள்ளது. மருந்து கோட்டை, மையக்கோட்டை ஆகியன விலவூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளன. இவை தொல்லியல் துறையின் நிர்வாகத்தில் இல்லை என கூறப்படுகிறது. வருவாய் துறையின் அலட்சிய செயல்பாடுகளால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவிக்கிறது என்பதே உண்மை

புதர்களுக்கு மத்தியில் டிலெனாய் நினைவிடம்
பச்சைத் தமிழகம் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் கூறுகையில், டச்சுத் தளபதி டிலனாய் நினைவிடம் புதர் செடி மற்றும் மரங்கள் படர்ந்து பாதிப்பு அடையும் நிலையில் உள்ளது. இதனை அதன் முக்கியத்துவம் மாறாமல் புனரமைத்து பராமரிக்கவேண்டும். இப்பூங்காவில் உள்ள பழங்காலத்தில் குண்டு தயாரிக்கப்பட்ட உலை எந்த தகவலும் இன்றி முட்புதர்கள் நடுவே உள்ளது. அது பற்றிய தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். மருந்துக்கோட்டையை பராமரிக்கவோ, சுற்றுலா பயணிகள் பார்வையிட வழிவகை செய்யவோ அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இப்பகுதி பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது மருந்து கோட்டை அமைந்து உள்ள குன்று  ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி சீரழிந்துள்ளது. கோட்டையை சுற்றியுள்ள மலைப் பகுதி முழுவதும் கனரக எந்திரங்கள் மூலம் மண் மற்றும் பாறைகளை வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இங்கு உள்ளது. மேலும் இம்மலை பகுதி  சேதப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் கோட்டையின் உறுதித் தன்மையே கேள்விக்குறியாக உள்ளது. வரலாற்றுத் தொன்மை வாய்ந்த இந்த இடத்தில் இவ்வாறு கபளீகரம் செய்யப்பட்டு வரும் நிலையில் அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

மருந்துகோட்டையில் பைனாகுலர் டவர்
விலவூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பி.டி.எஸ்.மணி கூறுகையில், மருந்துக் கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மீது நின்று பார்த்தால் குளச்சல் துறைமுகம் தெரியும். எதிரிகளை கண்காணிக்கவும், மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்திய இக்கோட்டை இன்று பாழடைந்துள்ளது. இக்கோட்டைக்கு செல்ல பாதை ஏற்படுத்த வேண்டும் என 2010ல் சுற்றுலா துறைக்கு மனு கொடுக்கப்பட்டிருந்தது. இக்கோட்டைக்கு செல்ல பாதை ஏற்படுத்தி படிக்கட்டுகள் அமைக்க வேண்டும், பைனாகுலர் டவர் அமைத்து சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

தொல்லியல் துறையின்கீழ் ெகாண்டு வரப்படுமா?
செம்பவளம் வரலாற்று ஆய்வாளர் செந்தீநடராசன் கூறுகையில், பத்மநாபபுரம், உதயகிரி கோட்டைகள் வேணாட்டு அரசர் மார்த்தாண்டவர்மாவால் கட்டப்பட்டது. அதன்பின்னர் மருந்துகோட்டை, மையக்கோட்டை கட்டப்பட்டது. டிலெனாய் தளபதியான பிறகு மருந்து கோட்டை வெடிமருந்துகள் தயாரிக்கவும், பாதுகாக்கவும் கட்டப்பட்டவையாகும். மையக்கோட்டை போரில் இறந்த  வீரர்களை புதைக்கும் தலமாக இருந்தது. இந்த கோட்டைகள் இன்று உரிய பராமரிப்பன்றி உள்ளது. தொல்லியல் துறையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்துகிறோம் என்றார்.

Tags : Udayagiri ,Fort, pain , tourists
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...