×

மத்திய அரசு மானியத்தை நிறுத்தியதால் உரம் விலை கடும் உயர்வு: மூட்டைக்கு 700 வரை அதிகரிப்பு: விவசாயத்தொழிலை கைவிட வாய்ப்பு

விருதுநகர்:  மத்திய அரசு டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்களுக்கான மானியத்தை நிறுத்தியதால், உரங்களின் விலை மூட்டைக்கு ரூ.700 வரை உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு, கூலித்தொழிலுக்கு மாறும் நிலை  ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல  மாநில விவசாயிகள் தலைநகர் டில்லியில் சுமார் நான்கரை மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை  கண்டுகொள்ளாத மத்திய பாஜ அரசு, விவசாயிகளின் மேல் மற்றொரு தாக்குதலை தொடுத்துள்ளது. விவசாயிகள் வாங்கும் உரங்களுக்கு மானியம் வழங்கி வந்த நிலையில், மானியத்தை படிப்படியாக விலக்கி கொண்டு வருகிறது. நெல்,  பருத்தி, மிளகாய், உளுந்து, மக்காச்சோளம் உள்பட அனைத்து பயிர்களுக்கும் அடியுரமாக டிஏபி போட்டால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். யூரியா, பெட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் உரங்களின் கலவையே காம்ப்ளக்ஸ் உரங்கள். இந்த உரங்களை மேல் உரங்களாக பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க முடியும். இந்நிலையில் மத்திய அரசு டிஏபி மற்றும் காம்பளக்ஸ் உரங்களுக்கான மானியத்தை விலக்கி கொண்டதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் கடந்த மாதம் ரூ.1,200க்கு விற்ற டிஏபி 50 கிலோ தற்போது ரூ.1,900 ஆக விலை உயர்ந்துள்ளது. இதேபோல, ரூ.900க்கு விற்ற காம்ப்ளக்ஸ் உரங்கள் 20:20 ரூ.1,350, ரூ.1,175க்கு விற்ற 10:26:26 உரம் ரூ.1,775, ரூ.900க்கு விற்ற 15:15:15 உரம்  ரூ.1,500, ரூ.1,200க்கு விற்ற 12:32:16 உரம் ரூ.1,800 என விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இவ்வாறு உரங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதால், அனைத்து உணவு தானியங்கள், காய்கறிகள் விலைகள் கடுமையாக உயரும் அபாயம்  ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா கூறுகையில், ‘‘பாஜ அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்துவோம் என கூறி ஆட்சிக்கு வந்தது. தற்போது விவசாயிகளான உர மானியத்தை  விலக்கி கொண்டிருப்பது, விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு கூலிகளாக மாறும் நிலைக்கு தள்ளி உள்ளது. மேலும், இந்தியாவில் விவசாயத்தையும், உணவு உற்பத்தியையும் நிறுத்திவிட்டு, வெளிநாடுகளில் இருந்து கார்ப்ரேட் நிறுவனங்கள்  மூலம் உணவு, தானியங்களை இறக்குமதி செய்வதற்கும், 3 வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையாக கருதுகிறோம். மேலும் உர விற்பனை நிலையங்கள் பழைய இருப்புகளை புதிய விலைக்கு விற்பனை செய்து,  கொள்ளை லாபம் பார்க்கும் வேலையை துவங்கி விட்டன. டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களுக்கான மானியத்தை நிறுத்தி விலை உயர்வு உண்டாக்கி இருப்பதால் உணவு பொருட்கள் விலைகள் கடுமையாக உயரும். டிஏபி, காம்ப்ளக்ஸ்  மானியம் நிறுத்தம் இந்திய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல்’’ என்றார்….

The post மத்திய அரசு மானியத்தை நிறுத்தியதால் உரம் விலை கடும் உயர்வு: மூட்டைக்கு 700 வரை அதிகரிப்பு: விவசாயத்தொழிலை கைவிட வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : central government ,Virudhunagar ,DAP ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...