×

தனியார் பள்ளியில் 27 மாணவர்களுக்கு கொரோனா?: வாட்ஸ் அப்பில் பரவிய தகவலால் பரபரப்பு

தங்கவயல்: தங்கவயல் செயிண்ட் ஜோசப் பள்ளியில் 27  மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு என்ற வாட்ஸ் அப்பில் பரவிய வதந்தியால்  பரபரப்பு ஏற்பட்டது.  தங்கவயல் சாம்பியன் பகுதியில் செயிண்ட் ஜோசப் பள்ளி உள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு உயர் நிலை பள்ளி மட்டும் இயங்கி  வருகிறது. இரண்டாவது அலை கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தங்கவயலை சேர்ந்த பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களில் ,  செயிண்ட் ஜோசப் கான்வென்டை சேர்ந்த 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக , மாணவர்களின் பெயர் விவரங்களுடன்  பட்டியல் வெளியாகி, அது பலராலும் பகிரப்பட்டு வைரலானது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் இடையே அச்சம் ஏற்பட்டது. இது குறித்து உண்மை நிலை அறிய பள்ளியின் முதல்வர் சிஸ்டர் ரூபினாவை சந்தித்து விளக்கம் கேட்டபோது, “பங்காரு பேட்டை தாலுகாவில்  உள்ள ஒரு ஆதரவற்றோர் விடுதியை சேர்ந்த 27 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும்  கோலார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த மாணவர்களில் பலர் ஜோசப் கான்வென்ட் மாணவர்கள். அவர்களுக்கு கொரோனா  பாதிப்பு கண்டறியப்பட்ட பிறகு அவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இந்த வாட்ஸ் அப் வதந்தி காரணமாக பள்ளி முழுவதும் நகரசபை சார்பில்  சானிடைசர் தெளிக்கப்பட்டது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் சுகாதார துறையின் சார்பில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.  மாணவர்களுக்கு கட்டாய முக கவசத்துடன், சமுக இடைவெளியோடு அமர வைக்கப்பட்டு , பாடம் நடத்தப்படுகிறது. பொது மக்கள் அச்சம் கொள்ள  வேண்டாம்’’ என்றார்….

The post தனியார் பள்ளியில் 27 மாணவர்களுக்கு கொரோனா?: வாட்ஸ் அப்பில் பரவிய தகவலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thangavyal ,Thangavyal St. Joseph School ,
× RELATED பங்காருபேட்டையில் வியாபாரியிடம் 2.5...