×

அணையில் 98 சதவீதம் நீர் இருப்பு மணிமுத்தாறு நீர்மட்டம் 117 அடியானது: நீர்வரத்து 500 கனஅடி

நெல்லை: மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணையில் 98 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வரத்து 500 கன அடியாக குறைந்துள்ளது.நெல்லை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் அமைந்துள்ளன. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை கிடைத்து வருகிறது. இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி விடும்.இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் துவக்கம் முதலே நல்ல மழை கிடைத்தது. இதனால் பாபநாசம், சேர்வலாறு அணைகள் கடந்த மாதம் முதல் வாரமே நிரம்பி வழிந்தன. கடந்த ஒரு மாதமாக உபரி நீர் ஷட்டர்கள் திறக்கப்பட்டு தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. எனினும் மணிமுத்தாறு அணைப்பகுதியில் போதிய மழை இல்லாததால், அப்போது அணையின் நீர்மட்டம் அதிகபட்சமாக 111.70 அடி வரை உயர்ந்தது. அதன் பிறகு 80 அடி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் உயரவில்லை. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 116.35 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 116.85 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 576 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 5 ஆயிரத்து 511 மில்லியன் கன அடியாகும். அணையில் தற்போது 5 ஆயிரத்து 396 மில்லியன் கன அடி தண்ணீர்  தேங்கியுள்ளது. இதன் மூலம் அணையில் 97.92 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. அணைப்பகுதியில் 5 மிமீ மழை பெய்துள்ளது. அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளதால், உபரிநீர் எந்த நேரத்திலும் திறக்க வாய்ப்புள்ளது.பாபநாசம் அணை நீர்மட்டம் 142.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 145.67 அடியாக உள்ளது. இரு அணைகளுக்கும் விநாடிக்கு 1494 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1443 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாபநாசம் அணையில் 25 மிமீ, சேர்வலாறு அணையில் 4 மிமீ மழை பதிவாகியுள்ளது. மறைமுக பாசனத்திற்கு 12ல் தண்ணீர் திறப்புமுதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நெல்லை  மாவட்டம், மணிமுத்தாறு அணையில் இருந்து மணிமுத்தாறு பிரதான கால்வாயின் 1  மற்றும் 2வது ரீச்சுகளின் கீழ் உள்ள மறைமுக பாசன பகுதிகளில் பிசான  சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள்  வந்துள்ளன. இதை ஏற்று, மணிமுத்தாறு அணையில் இருந்து, மணிமுத்தாறு பிரதான  கால்வாயின் 1 மற்றும் 2வது ரீச்சுகளின் கீழ் உள்ள மறைமுக பாசன  பரப்புகளுக்கு வருகிற 12ம் தேதி முதல் 31.3.21 வரை 79 நாட்களுக்கு பிசான  பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். இதனால், நெல்லை  மாவட்டத்தில் உள்ள அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, பாளையங்கோட்டை  வட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் வட்டம் ஆகிய  வட்டங்களில் உள்ள 11,134 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அவர்  கூறியுள்ளார்….

The post அணையில் 98 சதவீதம் நீர் இருப்பு மணிமுத்தாறு நீர்மட்டம் 117 அடியானது: நீர்வரத்து 500 கனஅடி appeared first on Dinakaran.

Tags : Manimutharai Dam ,Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...