×

நாடு கடத்துவதை எதிர்த்து மேல்முறையீடு செய்த மல்லையாவுக்கு 7 மாதங்களுக்கு ஜாலி: பிப்.11ல் விசாரிப்பதாக லண்டன் ஐகோர்ட் அறிவிப்பு

லண்டன்: வங்கி கடன் மோசடி வழக்கில் இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து தொழிலதிபர் மல்லையா தொடர்ந்த மேல்முறையீடு மனுவை அடுத்தாண்டு பிப்ரவரி 11ம் தேதி விசாரிப்பதாக லண்டன் உயர் நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. இந்திய வங்கிகளில் 9,000 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல், தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2016ம் ஆண்டு லண்டனுக்கு தப்பி ஓடினார். அவரை நாடு கடத்த உத்தரவிடக் கோரி, லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்திய அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், மல்லையாவை நாடு கடத்துவதில் எந்த தடையும் இல்லை என கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவில் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் கையெழுத்திட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக் கோரி, லண்டன் உயர் நீதிமன்றத்தில் மல்லையா மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம், மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியது. இதையடுத்து, மல்லையா தரப்பில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரிப்பதற்கான தேதியை லண்டன் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.  அதன்படி, மல்லையாவின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய வங்கிகள் கேட்கும் 100 சதவீத கடன் தொகையையும் திருப்பி செலுத்த தயாராக இருந்தும் அவற்றை வங்கிகள் வாங்க மறுப்பது ஏன்? என மல்லையா தனது டிவிட்டர் பதிவுகளில் கேள்வி கேட்டுள்ளார். அதேபோல், அவர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் நீண்ட வாதம் நடத்தப்பட்ட பிறகே அவருக்கு மேல்முறையீடுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேல்முறையீடு மனு மீதான விசாரணை 7 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால், அதுவரை அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது என்பது இயலாத காரியம். மனு மீதான விசாரணை முடியும் வரை அவர், லண்டனில்தான் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Tags : Deportation, Mallya, London Icord
× RELATED மருத்துவ மாணவர் சேர்க்கையில் பணியில்...