×

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணி சாவு?....நத்தம் அருகே உறவினர்கள் மறியல்

நத்தம்: நத்தம் அருகே ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணி பலியானார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மணப்புலிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி ஜோதிகா(23). கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஜோதிகா வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்தது. பிரசவத்திற்கு தன்னை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஜோதிகா, ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் ஊழியர்களோ, அருகிலுள்ள செந்துறை ஆரம்ப சுகாதார நிலையம்தான் செல்வோம் என கூறி அங்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பெண் டாக்டர் இல்லை என்று கூறப்படுகிறது. பணியிலிருந்த டாக்டர் ஜோதிகாவை பரிசோதித்து முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்துள்ளார். திண்டுக்கல் கொண்டு செல்லும் வழியில் அவரது மூக்கிலிருந்து ரத்தம் வந்ததாக கூறப்படுகிறது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்த ஜோதிகாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள ஜோதிகா உடலை வாங்க மறுத்து வருகின்றனர். செந்துறையில் உள்ள மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று காலை ஜோதிகாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். நத்தம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சேகர், வருவாய் ஆய்வாளர் தியாகு மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் 2 மணி நேரத்திற்கு மேலாக மறியல் தொடர்ந்தது.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு ஆரம்பத்திலேயே ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் ஜோதிகா கூறியுள்ளார். ஆனால் அவர்கள் திண்டுக்கல் செல்வதை தவிர்த்து செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அங்கு பெண் டாக்டர் இல்லாததால்  பணியிலிருந்த டாக்டரை வைத்து சிகிச்சை அளித்து கால தாமதம் செய்ததால் ஜோதிகா இறந்து போனார். எனவே ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் செந்துறையில் இருந்த டாக்டர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். காலை 11 மணி வரை நீடித்த இந்த மறியலால் துவரங்குறிச்சி-நத்தம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Ambulance, Staff, Pregnant, Noise, Pickle
× RELATED நாடாளுமன்ற ஊழியர்கள் மேலும் 300 பேருக்கு கொரோனா