×

பெண் பிரதிநிதிகளை பற்றி இனவெறி கருத்து டிரம்புக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து 240 எம்பி.க்கள் வாக்கு: அமெரிக்காவில் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களுக்கு எதிராக டிவிட்டரில் டிரம்ப் வெளியிட்ட இனவெறி கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக 240 எம்பி.க்கள் வாக்களித்து உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், இனவெறியை தூண்டும் வகையிலான கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. ஒபாமா போட்டியிட்டபோது இதே போன்ற கருத்து எழுந்தது. தற்போது, டிரம்புக்கு எதிராக போட்டியிட உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த செனட் உறுப்பினர் கமலா ஹாரிசுக்கு எதிராக இனவெறி கருத்துக்கள் பகிரப்படுகின்றன. ‘அமெரிக்கா, அமெரிக்க மக்களுக்கே’ என்ற கொள்கையில் அதிபர் டிரம்ப் மிக உறுதியாக உள்ளார். இதனால்தான், பிற நாடுகளில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையில் கருத்துகளை டிரம்ப் பதிவு செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

 இந்த சூழ்நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த 4 பெண் எம்பி.க்களுக்கு எதிராக டிவிட்டர் பதிவை வெளிட்ட டிரம்ப், ‘முற்போக்கு சிந்தனை கொண்ட ஜனநாயக கட்சி பெண் எம்பி.க்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அந்த பூர்வீக நாடுகள் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை பார்க்க வேண்டும். எங்கள் நாட்டை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அல்லது இங்கே நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றால், நீங்கள் உங்கள் பூர்வீக நாட்டுக்கே செல்லலாம். அங்குள்ள குற்றங்களை கண்டுபிடிக்க உதவலாம்,’ என குறிப்பிட்டு இருந்தார். டிரம்ப் தனது பதிவில் பெண் எம்பி.க்களின் பெயர்களை முதலில் குறிப்பிடவில்லை. ஆனால், ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்பி.க்களான ரஷிதா டலாய்ப், அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ கோர்டெஸ், ஐயானா பிரெஸ்லி, இல்ஹான் ஓமர் 4 பெண் எம்பி.க்கள்தான் டிரம்பின் குடியேற்ற கொள்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவர்களில் ஓமர் தவிர மற்ற 3 பேரும் அமெரிக்காவில் பிறந்தவர்கள். ஓமர் சோமாலியாவில் பிறந்து, சிறு வயதிலேயே அமெரிக்காவில் வளர்ந்தவர்.  4 பேரின் பூர்வீகமும் வெவ்வேறு நாடுகள்.

 எனவே, இவர்களை குறிப்பிட்டுதான் டிரம்ப் கருத்து கூறியுள்ளார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. டிரம்பின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஆதரவாக 240 எம்பி.க்களும், எதிர்த்து 187 எம்பி.க்களும் வாக்களித்தனர். டிரம்புக்கு எதிரான தீர்மானம் கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டு இருப்பதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து, இந்த தீர்மானம் செனட்டில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : 240 MPs ,vote against, anti-Trump, resolution , female representatives
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...