×

வேலூர் மக்களவை தேர்தலையொட்டி பணம், பரிசுகள் தருவதை தடுக்க கூடுதலாக 72 படைகள் அமைப்பு: தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவு

வேலூர்: வேலூர் மக்களவை தேர்தலில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க நேற்று முதல் கூடுதலாக 72 படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தொகுதிக்கான ேதர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 11ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க 24 மணி நேரமும் கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 13 பறக்கும் படை, 13 நிலையான கண்காணிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டுள்னர். தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் தேர்தல் நன்னடத்தை விதிகளை கண்காணிக்கவும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கவும் கூடுதலாக 72 குழுக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: தற்போது ஒரு தொகுதிக்கு ஒரு பறக்கும்படை, ஒரு நிலைகண்காணிப்பு குழு என மொத்தம் 36 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 2 பறக்கும்படை குழுக்கள், 2 நிலையான கண்காணிப்பு குழுவினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 108 குழுக்கள் பணியில் உள்ளனர். இவர்களின் வாகனங்களுக்கு ஜிபிஆர்எஸ் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது.  வரும் நாட்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு முற்றிலுமாக பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.27 லட்சம் சிக்கியது
வேலூர் அடுத்த புதுவசூர் கிராமத்தில் வசிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் ஏழுமலை வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படையினர், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் நேற்று மதியம் 12 மணியளவில் ஏழுமலை வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது, அதிகாரிகளை பார்த்ததும் வீட்டில் இருந்த ஒருவர் வீட்டின் பின்பக்கமாக ஒரு பையை தூக்கி வீசியுள்ளார். இதைப்பார்த்து சந்தேகமடைந்த அதிகாரிகள் உடனடியாக பையை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் ₹27 லட்சத்து 76 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டின் கதவுகளை மூடிவிட்டு, ஒவ்வொரு அறையாக அதிகாரிகள் சோதனை செய்தனர்.  

விசாரணையில், ‘ஏழுமலையின் மனைவி பெயரில் இருந்த நிலத்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விற்பனை செய்ததில் ₹10 லட்சம் கிடைத்ததாகவும், அவரது மகன் பெயரில் இருந்த சொத்து ₹9 லட்சத்துக்கு விற்பனை செய்ததாகவும், மேலும் ஒரு இடத்தை விற்பனை செய்ததில் ₹5 லட்சம் என மொத்தம் ₹24 லட்சம் வீட்டில் வைத்திருந்தோம்’ என கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மதியம் 12 மணிக்கு தொடங்கிய சோதனை, இரவு 7 மணிக்கு முடிந்தது. இதையடுத்து ஒரு சூட்கேஸ், ஒரு மஞ்சள் நிற பை ஆகியவற்றில் பணம், ஆவணங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். இவை அனைத்தும் வேலூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தாசில்தார் ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Vellore,Lok Sabha Elections, Additional, 72 Forces , Prevent Money , Gifts
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...