×

ஏற்கனவே உள்ள சாலையை விரிவாக்கம் செய்யலாம் சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்: மத்திய அமைச்சரிடம் 5 எம்பிக்கள் நேரில் வலியுறுத்தல்

சேலம்: சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என சேலம், தர்மபுரி உள்ளிட்ட 5 எம்பிக்கள், மத்திய அமைச்சர் நிதின்கட்கரியிடம் வலியுறுத்தியுள்ளனர். சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படும் 5 மாவட்டத்தில் இருந்து தேர்வான எம்பிக்கள் எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), செந்தில்குமார் (தர்மபுரி), கவுதமசிகாமணி (கள்ளக்குறிச்சி), கணேசன் செல்வம் (காஞ்சிபுரம்), அண்ணாதுரை (திருவண்ணாமலை) ஆகிேயார் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கிரியை நேற்று சந்தித்து, சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.     

இது குறித்து அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ₹10 ஆயிரம் கோடியில் சேலம்-சென்னை இடையே 276 கி.மீ. தூரத்திற்கு 8 வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சேலம்-சென்னை இடையே ஏற்கனவே 3 நெடுஞ்சாலைகள் உள்ளன. என்எச் 48 மற்றும்என்இ2  சாலையானது, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலத்திற்கு 352.7 கி.மீ. நீளத்தில் 4, 6 வழிச்சாலையாக இருக்கிறது. என்எச் 48 மற்றும் எஸ்எச்18 சாலையானது, 331.89 கி.மீ. நீளத்தில் 2, 4 வழிச்சாலையாக உள்ளது. என்எச் 32 சாலையானது, சென்னை-விழுப்புரம் வழியாக 334.28 கி.மீ., நீளத்தில் 2, 4 வழிச்சாலையாக இருக்கிறது. சென்னையில் இருந்து தமிழகத்தின் பிறபகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் செல்ல சுற்றுச்சாலை வழியாகவே செல்ல வேண்டும். சென்னை-வண்டலூர், சென்னை-காஞ்சிபுரம் வரையில் உள்ள குறுகிய சாலையால் தான், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த வழித்தடங்களை அகலப்படுத்தினாலே பயண நேரத்தை குறைக்க முடியும்.

ஏற்கனவே உள்ள 3 சேலம்-சென்னை வழித்தடங்களுக்கும், புதிதாக அமையவுள்ள 8 வழிச்சாலைக்கும் 40 கி.மீ.,மட்டுமே பயண தூரம் குறைவு. இதற்காக ₹10 ஆயிரம் கோடியை விரையம் செய்வதும், பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதும் ஏற்புடையது அல்ல. இத்திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் குழந்தைகளுடன் நடுத்தெருவில் போராடிக்கொண்டுள்ளனர். எனவே, ஏற்கனவே உள்ள 3 வழித்தடங்களை விவசாய நிலங்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த மனுவில் எம்பிக்கள் கூறியுள்ளனர். மனுவை பெற்ற அமைச்சர் நிதின்கட்கரி, ‘‘இத்திட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இருப்பினும் இக்கோரிக்கையை பரிசீலிக்கிறோம்,’’ எனக்கூறியதாக எம்பிக்கள் தெரிவித்தனர்.

Tags : Extension , existing road ,abandoned ,Salem-Chennai 8 road project,5 MPs call,Union minister
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...