×

கடையநல்லூர் பகுதியில் தோட்டப்பயிர்களை நாசப்படுத்திய யானைக் கூட்டம்

கடையநல்லூர்: கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி கருப்பாநதி அணைப்பகுதியில் தண்ணீர் தேடி வந்த காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை, மாமரங்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம், கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதி விளைநிலங்களில் காட்டு யானைகள் அடிக்கடி கூட்டம் கூட்டமாக நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த வாரம் மேக்கரை, வடகரை பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து தென்னைகள், வாழைகளை சேதப்படுத்தியது. கடந்த 2ம் தேதி கடையநல்லூர் வனச்சரகத்திற்குட்பட்ட இரண்டு ஆற்று முக்கு பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக நுழைந்து நான்கு விவசாயிகளுக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகள், 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. கடந்த 6ம் தேதி மீண்டும் இரண்டு ஆற்று முக்கு வைரவன்குளம், கருஞ்சனாப்பேரி பகுதி தென்னந்தோப்பில் கூட்டமாக நுழைந்த யானைகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களின் குருத்துக்களை பிடுங்கியும், மட்டைகளை உடைத்தும் சேதப்படுத்தியுருந்தது.

இந்நிலையில் கருப்பாநதி அணையில் தண்ணீர் தேடி வந்த யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்தது. சொக்கம்பட்டி திரிகூடபுரத்திலிருந்து கருப்பாநதி அணைக்கு செல்லும் வழியில் சுமார் 1 கி.மீட்டர் தொலைவில் சொக்கம்பட்டி பீட் வறட்டு ஆற்று குப்பத்து ஓடை பகுதியில் நேற்று முன்தினம் இரவில் அக்பர்அலி, மீரான்மைதீன், மிதார்சாகுல், மாரித்துரை, துரை ஆகியோரது தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் 80க்கும் மேற்பட்ட தென்னைமரங்கள், 100க்கும் மேற்பட்ட வாழைகள், 50க்கும் மேற்பட்ட மாமரங்கள் மற்றும் வெள்ளரிக்கொடிகளை சேதப்படுத்தியது. மேலும் மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டு செல்லக்கூடிய பைப்கள், கம்பிவேலிகளையும் சேதப்படுத்தியுள்ளது. இது குறித்து தவலறிந்த வனச்சரக அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் வனவர் அருமைக்கொடி, வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், செல்வராஜ், சசிகுமார், வேட்டை தடுப்பு காவலர்கள் சுப்புராஜ், மாணிக்கம், பால்ராஜ், ராஜ்முத்து ஆகியோர் விரைந்து சென்று வெடி போட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Elephant herd
× RELATED தொப்பூர் அருகே 2 லாரிகள் மீது டேங்கர் லாரி மோதி விபத்து-4 பேர் படுகாயம்