×

பாஸ்போர்ட் பெறுவது மிகவும் எளிமையான விஷயம் மக்கள் சிரமமாக பார்க்க வேண்டாம்

* தபால் அலுவலகங்களில் புதிய வசதி* இடைத்தரகர்களை ஊக்குவிக்க கூடாது* சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஹேமநாதன் பேட்டிசென்னை: இளைஞர்கள் மற்றும் படித்த பட்டாதாரி என அனைவருக்கும் இணையதளத்தின் பயன்பாடு கைப்பழக்கமாக இருந்தாலும், பாஸ்போர்ட் என்றவுடன் இடைத்தரகர்களை தான் மக்கள் தேடி செல்கின்றனர். அதை பெரிய வேலையாக நினைத்து பல ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குகின்றனர். ஆனால் பாஸ்போர்ட் வாங்குவது ஒரு பெரிய விஷயமே கிடையாது. விண்ணப்பம் முதல் கட்டணம் வரை அனைத்தையும் அரசு எளிமை படுத்தியுள்ளது. இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.ஹேமநாதன் கூறியதாவது: பாஸ்போர்ட் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.passportindia.gov.in என்ற இணையதளத்தில், படிவத்தில் கேட்கப்பட்டுள்ளதை நிரப்ப வேண்டும். கட்டணம் ரூ.1500 ஆன்லைனில் செலுத்த வேண்டும். அனைத்தும் நிரப்பிய பின்பு இன்டர்வியூவிற்கு ஒருநாள் தேர்ந்தெடுத்து, சென்னையில் உள்ள தாம்பரம், சாலிகிராமம், நெல்சன் மாணிக்கம் சாலை போன்ற இடங்களில் உள்ள அலுவலகங்களில் சென்று தங்களது ஆவணங்களை கொடுத்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஆவணங்கள் என்றால் இருப்பிடம் மற்றும் பிறந்த தேதி ஆவணங்கள், அதில் ரேஷன் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, தொலைபேசி ரசீது, காஸ் இணைப்பிற்கான ரசீது போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை இருப்பிடத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இதேபோல், பிறந்த தேதிக்கு, பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழே போதுமானது. இவைகளை வைத்து விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பதாரர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா என்பது குறித்து விசாரிக்க போலீஸ் விசாரணைக்காக அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். அவர்கள் விசாரித்து தகவல் தெரிவித்த உடனே சில நாட்களில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும். அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இவை ஒருபுறம் இருக்க, அலைச்சலை தவிர்க்கு்ம் வகையில் அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. பி.ஒ.பி.எஸ்.கே திட்டம். தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம். இந்த திட்டம் ஆரணி, சிதம்பரம், கடலூர், தர்மபுரி, சென்னை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை என 13 மாவட்ட தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நாளைக்கு 40 பேர் வரை விண்ணப்பிக்கலாம், வேலூரில் மட்டும் 80 பேர் வரை விண்ணப்பிக்கலாம். ஆனால் இதனை மக்கள் இன்னும் சரியாக பின்பற்றி பயன்பெறவில்லை. இதுபோன்ற நல்ல வசதிகள் உள்ள நிலையில், தேவையற்ற தரகர்களை தொடர்புகொண்டு வெறும் ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டியவர்கள், அதிகபட்சமான பணத்தை இழந்து வருகின்றனர். அரசு ஒருபோதும் இடைத்தரகர்களை ஊக்குவிப்பதில்லை, அவர்கள் பெறும் பணத்திற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய சிரமமாக உள்ளதாக கருதி, 7 பக்கம் இருந்த விண்ணப்பம் தற்போது 2 பக்கமாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் அரசு ஏற்படுத்தியுள்ள வசதியை பின்பற்றி பயன்பெற வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும்போது, பாஸ்போர்ட் அலுவலகத்தின் அங்கீகரிப்பட்ட இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். பிற போலி வெப்சைட்டில் விண்ணப்பித்து பலர் பணத்தை இழந்து வருகின்றனர். அந்த மோசடி கும்பல்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தாலும் காவல்துறை சைபர் க்ரைமில் புகார் அளிக்கலாம். ஒவ்வொரும் நாளும் 1000க்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கின்றனர், ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. கடந்த வருடம் கொரோனா என்பதால் 2.8 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. எண்ணிக்கை குறைந்தது, இதனாலயே தற்போது தபால் அலுவலகம் மூலம் பயன்பெற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதேபோல் ஏதேனும் குறைகளோ, அலுவலகத்தில் சந்தேகங்கள் என்றாலோ வீடியோ கான்பிரன்ஸ் வழியாக பேச rpochennaipublic@@gmail.com, ஸ்கைப் cid.1a27fe4d2074be7a என்ற ஐடி மூலம் தொடர்பு கொண்டு பேசலாம், அதிகாரிகள் எப்போதும் உரிய விளக்கம் தருவார்கள். தேவையில்லாமல் அலுவலகத்துக்கு அலைவதை தவிர்த்து இதை பயன்படுத்திக்கொள்ளலாம். பாஸ்போர்ட் என்பது இரு வேறு நாடுகளுக்கு இடையேயான விஷயம் என்பதால், ஆவணங்கள் மிகவும் கவனமாக ஆராய்ந்து பார்க்கப்படுகிறது, குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு நீதிமன்றத்தில் இருந்து உரிய உத்தரவு பெற்று வந்த பிறகே சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.* தினமும் 1000 பேர் விண்ணப்பிப்புமக்கள் தேவையில்லாத அலைச்சலை தவிர்க்க தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் கொரோனா தாக்கத்தால் வழக்கத்தை விட பாதியாக குறைந்து 2.8 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. தினமும் 1000 பேருக்கு மேல் விண்ணப்பித்து வருகின்றனர்….

The post பாஸ்போர்ட் பெறுவது மிகவும் எளிமையான விஷயம் மக்கள் சிரமமாக பார்க்க வேண்டாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Zonal ,Passport Officer ,Hemanathan Pettychennai ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்