×

விம்பிள்டன் டென்னிஸ் கால் இறுதியில் நடால்

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி பெற்றார். நான்காவது சுற்றில் போர்ச்சுகல் வீரர் ஜோவோ சோசாவுடன் (69வது ரேங்க்) நேற்று மோதிய நடால் (2வது ரேங்க்) 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 45 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. நடால் 7வது முறையாக விம்பிள்டன் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளார். மற்றொரு ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாடிஸ்டா அகுத் தனது 4வது சுற்றில் 6-3, 7-5, 6-2 என்ற நேர் செட்களில் பெனாய்ட் பேரை (பிரான்ஸ்) வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். பெல்ஜியம் வீரர் டேவிட் காபின் தனது 4வது சுற்றில் 7-6 (11-9), 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை வென்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நேற்று களமிறங்கிய நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.) 6-3, 2-6, 3-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலிசான் ரிஸ்கியிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். மற்றொரு 4வது சுற்றில் அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கர்லா சுவாரஸ் நவரோவை மிக எளிதாக வீழ்த்தினார்.15 வயது பள்ளி மாணவி கோரி காப் (அமெரிக்கா) தனது 4வது சுற்றில் 3-6, 3-6 என்ற நேர் செட்களில் ரோமானியாவின் சிமோனா ஹாலெப்பிடம் தோல்வியை தழுவினார். டென்னிஸ் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்த கோரி காபின் வெற்றிப் பயணம் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுடன் முடிவுக்கு வந்தது.
முன்னணி வீராங்கனைகள் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பார்போரா ஸ்டிரைகோவா (செக் குடியரசு), ஷுவாய் ஸாங் (சீனா) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பிளிஸ்கோவா போராட்டம் வீண்: மகளிர் ஒற்றையர் 4வது சுற்றில் செக் குடியரசு வீராங்கனைகள் கரோலினா பிளிஸ்கோவா (3வது ரேங்க், 27 வயது) - கரோலினா முச்சோவா (68வது ரேங்க், 22 வயது) நேற்று மோதினர். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா 6-4, 5-7, 11-13 என்ற செட் கணக்கில் 3 மணி, 16 நிமிடம் போராடி தோல்வியைத் தழுவினார்.


Tags : Wimbledon Dennis, Natal
× RELATED அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போபண்ணா - ராம்குமார் சாம்பியன்