×

பருவமழை துவங்காததால் தேனியில் முதல்போக சாகுபடிக்கு சிக்கல்?

தேனி: தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்காததால் தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பாசன பரப்பில் அமைந்துள்ள நெல் வயல்களில் முதல்போக சாகுபடி நடக்குமா? நடக்காதா? என்று கணிக்க முடியாத சிக்கலான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் முதல்போக சாகுபடி 14 ஆயிரத்து 707 ஏக்கர் பாசன நிலங்களில் நடக்கிறது. இதற்காக முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டம் 112 அடி இருந்தாலே ஜூன் முதல் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பருவநிலை மாற்றத்தால் தென்மேற்கு பருவமழை தாமதமாக பெய்கிறது. அல்லது பொய்த்து போய் விடுகிறது. இப்படி பருவமழை பொய்த்ததால் பல ஆண்டுகள் முதல் போக சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.பல ஆண்டுகள் முதல் போகம் சாகுபடி செய்யப்பட்டு தண்ணீர் இல்லாமல் சிக்கலில் சிக்கி உள்ளது.

 தவிர தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களின் குடிநீருக்காக முல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகை அணைகளில் இருந்து தினமும் சராசரியா ஒரு விநாடிக்கு 190 கனஅடி வீதம் தண்ணீர் எடுக்கப்படுகிறது. எக்காரணம் கொண்டும் குடிநீர் பிரச்னை வந்து விடக்கூடாது என்பதில் அதிகாரிகள் கவனமாக உள்ளனர்.இதனால் பெரியாறு அணை நீர் மட்டம் 115 அடியை தாண்டினால் மட்டுமே முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்த ஆண்டும் பருவமழை சற்று தாமதமானாலும், முதல் போக சாகுபடி பாதிக்கப்படாது என நினைத்தனர்.ஆனால், ஜூலை 8 ம் தேதியை கடந்து விட்ட நிலையிலும் இன்னும் பருவமழை தொடங்கவில்லை. வழக்கமாக ஜூலை மாதம் கேரளா வெள்ளத்தில் மிதக்கும். தற்போது கேரளாவிலேயே வெயில் வாட்டி வருகிறது. எப்போதாவது ஒருமுறை மட்டுமே சிறிது நேரம் சாரல் பெய்கிறது. பெரியாறு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 250 கனஅடி என்ற நிலையிலேயே உள்ளது. அணையின் நீர் மட்டம் 112.40 அடியில் உள்ளது.தேனி மாவட்ட விவசாயிகள் எப்போது தண்ணீர் திறக்கப்பட்டாலும், விதைப்பு பணிகளை தொடங்க தயாராகவே உள்ளனர்.
ஆற்றங்கரையோரம் வயல்கள் வைத்திருப்பவர்கள் நிலங்களை உழுது தயாராக வைத்திருந்தாலும், சற்று தள்ளி உள்ள வயல்களை உழவு செய்யக்கூட மனமின்றி விவசாயிகள் சோகத்துடன் உள்ளனர்.ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் அப்பாஸ் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் பலமுறை முதல்போக சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவசரப்பட்டு நடவு செய்து வறட்சியில் சிக்கி பாதிப்படைந்த விவசாயிகளிடம் தற்போது மிகவும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. வானிலை நிலவரத்தை விவசாயிகள் தினமும் கவனிக்கின்றனர்.

இந்த ஆண்டு இதுவரை வெளியான வானிலை அறிக்கைகளின் படி ஒருமுறை கூட மழை பெய்யவில்லை. இதனால் வானிலை ஆய்வாளர்களே குழப்பத்தில் உள்ளனர். வானிலை நிலவரத்தை வெளியிடக்கூட தயங்குகின்றனர். அந்த அளவுக்கு பருவநிலை பாதிப்பு கடுமையாக உள்ளது. கேரளாவில் இன்று (நேற்று) சாரல் தொடங்கி உள்ளது. எனவே, பருவமழைக்கான அறிகுறிகள் தோன்றி உள்ளன. நாளை அல்லது நாளை மறுநாள் அணைக்கு வரும் நீர்் வரத்து விநாடிக்கு 500 கனஅடியை எட்டும்் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துளளனர். தொடர்ந்து நான்கு நாள் விநாடிக்கு 500 கனஅடி நீர் வந்தால் அணை நீர் மட்டம் 115 அடியை கடந்து விடும். எனவே, அணையில் இருந்து நீர் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அனுப்பி உள்ளோம். அணையில் இருந்து விநாடிக்கு 300 கனஅடி நீர் திறந்தால் நாற்றங்கால் வளர்த்து நடவுக்கு தயாராகி விடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.தேனி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் கூறியதாவது:

தேனி மாவட்டத்திற்கு மழை கிடைக்க மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்கள் வளமாக இருக்க வேண்டும். ஆனால், மேகமலை மட்டுமின்றி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மலைவளங்களை அழித்து விட்டனர். வைகையில் தண்ணீர் வருமா? வராதா? என விவாதிக்கும் அளவுக்கு மேகமலை கடுமையாக அழிக்கப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி தேனி மாவட்டத்தில் உள்ள 480க்கும் மேற்பட்ட கண்மாய்கள் முற்றிலும் வறண்டு கிடக்கின்றன. 33 ஆயிரத்து 860 கிணறுகள் உள்ளன. இதில் சில நூறு கிணறுகளில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் உள்ளது. பல லட்சம் போர்வெல்கள் வறண்டு கிடக்கின்றன. வயல்பகுதிகளில் உள்ள கிணறுகள் கூட வறண்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வறட்சியும், பருவமழை தாமதமும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜவகிரிபாய் கூறியதாவது:
பருவமழை தொடங்கியதும் நடவு செய்ய வசதியாக போர்வெல் உள்ள விவசாயிகளையும், கிணற்றில் தண்ணீர் வசதிகள் உள்ள விவசாயிகளையும் சந்தித்து அதிகளவு நெல் நாற்றுக்களை வளர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். தண்ணீர் திறந்த பின் நெல் நாற்றங்கால் வளர்த்து நடவு செய்ய தாமதம் ஏற்படுவதை தடுக்க, விவசாயிகளை சந்தித்து மற்ற விவசாயிகளுக்கு நாற்றுகள் வழங்கும் அளவுக்கு நாற்றங்கால் தயாரித்து தயாராக வையுங்கள் என அறிவுறுத்தி உள்ளோம். தவிர விதைப்பு செய்யாவிட்டாலும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பயிர்காப்பீடு திட்டம் உள்ளது. இம்மாதம் இறுதிக்குள் விவசாயிகள் பதிவு செய்து கொண்டால், இந்த காப்பீடு திட்டத்தில் பலன் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
                               


Tags : Monsoon, Honey, Cultivation, Problem
× RELATED பெண் வாங்கிய விவசாய கடனை சொந்த...