×

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மேலும் 104 கிணறுக்கு அனுமதி கோரி விண்ணப்பம்: ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய அரசிடம் முறையீடு

புதுடெல்லி: டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மேலும் 104 கிணறுகள்  அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி, ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்துள்ளதால், டெல்டா விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   தமிழகத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி மத்திய மாநில அரசுகளால், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, 67 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க  ஓஎன்ஜிசி நிறுவனமும், 274 இடங்களில் அமைக்க வேதாந்தா நிறுவனமும் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன. ஆனால், ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழகத்தில் தீவிரப் போராட்டங்கள்  நடத்தப்பட்டு வருகின்றன.  குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன், அதிமுக, பாஜ தவிர அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை 600 கிலோமீட்டர் தொலைவுக்கு 3 லட்சம் பேர் கலந்துகொண்ட  மனிதசங்கிலி போராட்டம் நடத்தின.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, சுற்றுச்சூழல் அனுமதிகோரி சம்பந்தப்பட்ட துறைக்கு விண்ணப்பித்துள்ளது. இதன்படி,  நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் கூடுதலாக 104 கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 கிணறுகள், திருவாரூரில் 59 கிணறுகள்,  தஞ்சாவூரில் 18 கிணறுகள், அரியலூரில் 3 கிணறுகளும், கடலூரில் 7 கிணறுகளும், ராமநாதபுரத்தில் 3 கிணறுகளும் அமைக்க திட்டமிட்டு, அதற்கான முன்அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

‘ஆயில் அண்ட் நேட்சுரல் காஸ் கார்ப்ரேஷன் லிமிட்டெட், சப் சர்பேஸ் வீம், காவேரி அசட், காரைக்கால்’ என்ற ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் இருந்து, மத்தகிய அரசின் தொழிலக திட்டம் - 2, செயலருக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.  அதில்,  ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். நாட்டில் 82 சதவீதம் பெட்ரோலிய மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்திய அரசு வருகிற 2022ம் ஆண்டுக்குள் பெட்ரோலிய  மூலப்பொருட்கள் இறக்குமதியை 10 சதவீதம் அளவிற்கு குறைக்க திட்டமிட்டுள்ளது.  அதனால் அந்த இலக்கை அடையவேண்டுமானால் ஓஎன்ஜிசி சார்பில், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த முடியும்.  அதனால், 104 இடங்களில் மேலும் கிணறுகள் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதி தரவேண்டும்.

இது தொடர்பான ஆவணங்கள் இக்கடித்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டு, அந்நிறுவனத்தின் சிஜிஎம் கே.முரளீதரன் என்பவர் கடந்த 18ம் தேதி கைெயழுத்திட்டுள்ளார்.  இந்நிலையில், பொதுக்களின் எதிர்ப்பை மீறி டெல்டா  மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மேலும் 104 கிணறுகள்  அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி, ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்துள்ளதால், டெல்டா விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.  மாவட்டம்  வாரியாக நாகையில்  காளி, நரிமணம்; திருவாரூரில் அதியக்காமங்கலம், விஜயபுரம், கமலாபுரம், கோவில்கலப்பால், வடக்கு கோவில்கலப்பால், அத்திகடை, மாத்தூர், மேற்கு மாத்தூர், தஞ்சாவூரில் புன்டி, அரியலூரில் அந்திமாடம்,  ராமநாதபுரத்தில் ராமனவலசை, கடலூரில் நெய்வேலி உள்ளிட்ட 17 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Delta Districts, Hydro Carbon Project, Well, ONGC, Central Government
× RELATED ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் நாளை...