×

மாணவிகளை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரப்பிய வாலிபர்கள் 5 பேர் கைது: பொள்ளாச்சி அருகே மீண்டும் பரபரப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவிகளை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரப்பிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவிகளை ஒரு கும்பல் பின் தொடர்ந்தும், மறைவான இடத்தில் இருந்தும் செல்போனில் படம் பிடித்து அதனை பேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த, அந்த மாணவிகளின் பெற்றோர், செல்போனில் படம் பிடித்த நபர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள், தகாத வார்த்தையால் பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, 2 நாட்களுக்கு முன்பு, மாணவிகளின் பெற்றோர் 4 பேர் ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் ஆனைமலை போலீசார் 5 பேரை பிடித்தனர்.

 விசாரணையில், முகமதுரியாஸ், வசந்தகுமார், முகமதுசபீர், முகமதுஹர்சத், கமருதீன்என்பது தெரியவந்தது. 5 பேரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஆனால், தினமும் பள்ளிக்கு செல்லும் அப்பகுதி மாணவிகளை செல்போனில் படம் எடுத்து, அந்த படத்தை ஒருவருக்கொருவர் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதில், முகமதுசபீர் என்பவர் வாட்ஸ்அப் மட்டுமின்றி பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.  இவர்களிடம் இருந்து, பெண்கள் புகைப்படம் எடுத்த 4 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதையடுத்து, முகமதுசபீர் என்பவரை போக்சோ சட்டத்திலும், மற்ற 4 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், தகாத வார்த்தையால் திட்டுதல், சமூக வலைதளங்களில் பரப்புதல் ஆகிய பிரிவிலும் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.  இவர்களில் முகமதுசபீரை, கோவை மகிளா கோர்ட்டிலும், மீதமுள்ள 4 பேரை பொள்ளாச்சி ஜேஎம் 1 கோர்ட்டிலும் போலீசார் ஆஜர்படுத்தினர்.

பொள்ளாச்சியில், சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் பலரை ஆபாச வீடியோ எடுத்ததுடன் பாலியல் பலாத்காரம் செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணையில் உள்ள நிலையில், தற்போது பள்ளி மாணவிகளை செல்போனில் படம் எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பரப்பிய நபர்களால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Tags : Picture , students, social network,Pollachi
× RELATED அங்கீகரிக்கப்பட்ட அரசியல்...