×

மாணவர்கள் சேர்க்கை இல்லாத பொறியியல் கல்லூரிகளை மூடுவதை தவிர வேறு வழி இல்லை : உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்

சென்னை: மாணவர்கள் சேர்க்கை இல்லாத பொறியியல் கல்லூரிகளை மூடுவதை தவிர வேறு வழி இல்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பிஇ, பிடெக் படிப்புகளுக்கான கவுன்சலிங் தொடங்கியது

பிஇ, பிடெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் இன்று தொடங்கியது. சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் இன்று நடக்கிறது. பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடத்த 1 லட்சத்து 72 ஆயிரம் இடங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்காக 1 லட்சத்து 33 ஆயிரம் பேர்  விண்ணப்பித்து சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்டனர். இவர்களில் 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் தகுதி பெற்று தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதையடுத்து, இன்று சிறப்பு பிரிவினருக்கான நேரடி கவுன்சலிங் தொடங்கியது

தொடர்ந்து, தொழிற்கல்வி  பிரிவினருக்கும் பின்னர் பொதுப் பிரிவுக்கும் கவுன்சலிங் நடக்கும். கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் ஆன்லைன் மூலம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கவுன்சலிங்கை நடத்துகிறது. சிறப்பு பிரிவினருக்கான  நேரடி கவுன்சலிங் இன்று தொடங்கி 27ம் தேதி வரை சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. முதல்நாளான இன்று மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்கின்றனர். 26ம் தேதி முன்னாள்  ராணுவத்தினரின் வாரிசுகள், 27ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சலிங்கும் நடக்கிறது. தொழிற்பாட பிரிவினருக்கான கவுன்சலிங் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கும். பின்னர் பொதுப் பிரிவினருக்கான ஆன்லைன் கவுன்சலிங்  ஜூலை 3ம் தேதி தொடங்கும்.

உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பேட்டி

இந்நிலையில் சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் கலந்தாய்வை உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான
கலந்தாய்வு ஆன்லைன் முறையில் ஜூலை 3ம் தொடங்க உள்ளதாக கூறினார். நடப்பு ஆண்டில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 47,000 பேர் முதல் தலைமுறை பட்டதாரி ஆவர் எனக் கூறிய அமைச்சர் அன்பழகன், 141 மாற்றுத் திறனாளிகள் மட்டுமே இம்முறை விண்ணப்பித்து உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அதன்படி இளநிலை படிப்புக்கு செமஸ்டருக்கு ரூ.15,000 ஆகவும், முதுநிலை படிப்புக்கு செமஸ்டருக்கு ரூ.18,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் கட்டண உயர்வு குறித்து சிண்டிகேட் குழு அரசுக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் சேர்க்கை இல்லாத கல்லூரிகளை மூடுவதை தவிர வேறு வழி இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.


Tags : engineering colleges ,Higher Education Minister , Students, Admissions, Engineering, Higher Education, Minister, Anabhagan, PE, BTech, Counseling
× RELATED நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவை...