×

கண்ணாமூச்சி காட்டிய சாரல் மழை... களக்காடு தலையணை மீண்டும் வறண்டது

களக்காடு: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யாததால் களக்காடு தலையணை மீண்டும் தண்ணீரின்றி வறண்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளனர். களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. வனத்துறையினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில், ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி ஓடுவதாலும், அதில் குளுமை அதிகம் என்பதாலும் இங்கு குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வர்.

இந்நிலையில் கோடை வெயிலால் ஏற்பட்ட வறட்சி காரணமாக கடந்த இரு மாதங்களாக தலையணை தண்ணீரின்றி வறண்டது. கடந்த வாரம் முதல் மேற்குத்தொடர்ச்சி மலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் வறண்டு கிடந்த தலையணையில் கடந்த 10ம் தேதி முதல் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. மிதமான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத்துவங்கினர். தலையணை ஆற்றில் குளித்து மகிழ்ந்ததுடன் மீன்கள் அருங்காட்சியகத்தையும் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இதனிடையே கடந்த இரு வாரங்களாக மேற்குத்தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்யவில்லை. இதனால் தலையணையில் தண்ணீர் மீண்டும் குறைய தொடங்கியது. மழை நின்றதால் தலையணை தண்ணீர் இன்றி மீண்டும் வறண்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags : Kalakkad, drought
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...