தமிழகம் முழுவதும் 21 அருங்காட்சியகங்களில் நாணயங்கள், பழங்கால பண்பாடுகள், கல்வெட்டுகளின் தமிழ் தொகுப்பு நூல்கள் விற்பனை

வேலூர்: தமிழகம் முழுவதும் 21 அருங்காட்சியகங்களில் நாணயங்கள், பழங்கால பண்பாடுகள், கல்வெட்டுகளின் தமிழ் தொகுப்பு நூல்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், மதுரை, கன்னியாகுமரி, ஊட்டி, கோவை, விருது நகர், கரூர், கிருஷ்ணகிரி, நெல்லை, காஞ்சிபுரம் உட்பட 21 மாநில அருங்காட்சியகங்கள் உள்ளன.

இந்த அருங்காட்சியகங்களில், பண்டைகால கல்வெட்டுகள், அக்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள், கற்சிற்பங்கள், ஐம்பொன் சிலைகள், ஓவியங்கள், அரியவகை புகைப்படங்கள், பண்டைய மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் என்று தொன்மையான பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதோடு, மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் விதமாக ஓவியப்போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாநிலம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களில் மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு நாணயங்கள், அருங்காட்சியகவியல் கலைச்சொற்கள், கலைப்பொருட்கள் பாதுகாப்பு, பழங்கால பண்பாடும், பழங்குடிகள் பண்பாடும், மருத்துவத்தாவரங்கள், கல்வெட்டுகள் போன்றவற்றின் வரலாறுகள் அடங்கிய தொகுப்பு நூல்கள் முன்பு பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்தது. இதனால் அதனை தமிழகத்தில் உள்ளவர்கள் முழுமையாக படித்து தெரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தது.

இந்நிலையில் தற்போது மேற்கண்ட அரியவகை நூல்களின் தமிழ் தொகுப்பு அருங்காட்சியகம் சார்பில் அச்சிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மாநிலம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களில் விற்பனை செய்ய அருங்காட்சியக இயக்குனர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாநிலம் முழுவதும் அரிய வகை நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலூர் அருங்காட்சியகத்தில் நாணயங்கள், கல்வெட்டுகள், பண்டைய கால வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு தொகுப்புகள் அடங்கிய தமிழ் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்று அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் தெரிவித்தார்.

× RELATED தமிழகம் முழுவதும் 21...