×

கம்பம் - கூடலூர் அருகே கேரள மருத்துவக்கழிவுகளை கொட்டுவதால் பேராபத்து

கம்பம்: கம்பம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்துப்பாட்டில் மருத்துவக்கழிவுகளும், குப்பைக் கழிவுகளும் அதிகம் கொட்டப்பட்டுள்ளன. ஆபத்தை ஏற்படுத்தும் மருத்துவக்கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த பின்பு வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்களான சிரிஞ்சுகள், ஊசிகள் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், கையுறைகள் அனைத்தும் மருத்துவக்கழிவு எனப்படுகிறது. இம்மருத்துவக்கழிவுகளில் காலாவதியான மருந்துகள், வேதிப்பொருள் கழிவுகள், ஆய்வகக் கழிவுகள் மஞ்சள் நிறப்பையிலும், கெட்டுப்போன மருந்துப் பொருள்கள், ஊசி நீக்கப்பட்ட சிரிஞ்ச், கையுறைகள் சிவப்பு நிறப்பைகளிலும், கத்தி, உடைந்த கண்ணாடி போன்றவை வெள்ளை நிற பைகளிலும், கண்ணாடிப் பொருள்கள், மரப் பெட்டிகள் போன்றவற்றை நீல நிறப் பெட்டிகளிலும் நான்கு விதமாகத் தரம் பிரித்துச் சேகரிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. இந்தக் கழிவுகளை ஒப்பந்த நிறுவனங்கள் மருத்துவமனைகளில் பெற்றறுக்கொண்டு ட்ரீட்மென்ட் பிளான்ட்களில் இன்சினரேட்டர், மைக்ரோவேவ்ஸ் போன்ற எரிப்பான்கள் மூலம் உயர்வெப்ப நிலையில் எரித்தல் முறையிலும், மறு சுழற்சி முறையிலும், ஆழப்புதைப்பதன் மூலமும் அழிக்கப்படுகிறது.

ஆனால், பல தனியார் மருத்துவமனைகள் இவ்விதிகளை பிடின்பற்றாமல் தங்கள் மருத்துவமனையில் பயன்படுத்திய ஊசி, ஊசி நீக்கப்பட்ட சிரிஞ்சு, மருந்து பாட்டில்கள்களை இரவு நேரங்களில் நெடுஞ்சாலையோரங்களில் கொட்டிவிடுகின்றனர். கம்பம் பகுதியில் கடந்த இருதினங்களுக்கு முன் ஊசி, சிரிஞ்சு, மருந்து பாட்டில்கள் அடங்கிய மருத்துவக் குப்பை கழிவுகள், கம்பம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில், தனியார் ஓட்டலை அடுத்து சாலை ஓரங்களில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நடை பயிற்சி செல்லும் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதுபோல் இந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் குப்பை கழிவுகளும் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளது. வாகனங்கள் விரைவாக செல்லும் போது குப்பைக்கழிவுகள் பறந்து ரோட்டுக்கு வந்து விடுகிறது. மேலும் கழிவுகளில் உணவு தேடிவரும் மாடு, நாய்கள் குப்பைகழிவிலுள்ள பிளாஸ்டிக் உண்பதால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஆபத்தை ஏற்படுத்தும் மருத்துவக்கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவத்துறையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், கேரளாவில் கழிவுகள் வனப்பகுதியிலோ, நீர்நிலைகளிலோ கொட்டினால் அம்மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் வாகனங்களையும் பறிமுதல் செய்கிறது. ஆனால், தமிழகத்தில் இந்த நடவடிக்கை இல்லாததால் மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுகின்றனர். இது தவறு எனத்தெரிந்தும் சிலர் சாலை ஓரங்களில் கொட்டி விடுகின்றனர். இக்கழிவு வேகமாக நோய்க் கிருமிகள் பரவக் காரணமாகிறது. மருத்துவக் கழிவுகளினால் பறவைகளும் மிருகங்களும் பெருமளவில் பாதிப்படைகின்றன. மருத்துவக் கழிவுகளை பொதுக்குப்பையோடு சேர்ப்பதால் இக்குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு நோய்கள் பரவும் வாய்ப்பும் அதிகம். அதுபோல் குப்பைகளிலுள்ள பாலித்தீன் பிளாஸ்டிக் பொருட்களை உண்பதால் விலங்குகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, மருத்துவக் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

Tags : Kerala ,Kumbal - Cuddalore , Pole, cuddalore, medical malpractice
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...