குஜிலியம்பாறையில் ‘விரிசல்’ விடுதி கட்டிடத்தால் தங்கி படிக்க அச்சம்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் விரிசலுடன் உள்ள ஆதிதிராவிடர் விடுதி கட்டிடத்தால் மாணவர்கள் தங்கி படிக்க அச்சப்படுகின்றனர். குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 1993ம் ஆண்டு அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டப்பட்டது. இதில் வார்டன், தலைமை சமையலர், உதவி சமையலர் என 3 பேர் பணிபுரிகின்றனர். தரைதளம், மேல்தளத்துடன் விடுதி செயல்பட்டு வருகிறது. விடுதி துவங்கிய சில ஆண்டுகள் வரை மாணவர்கள் அதிகளவில் தங்கி படித்து வந்தனர். நாளைடைவில் போதிய பராமரிப்பு இல்லாததால் விடுதி கட்டிடங்கள் ஆங்காங்கே விரிசல் அடைந்தன. மேலும் கான்கிரீட் மேற்கூரைகள் பெயர்ந்தும் கம்பிகள் வெளியே தெரிந்தன. இதனால் மாணவர்கள் தங்கி படிக்க அச்சப்பட்டதால் எண்ணிக்கை குறைய துவங்கியது. தற்போது கரிக்காலி, பிறப்பகவுண்டன்பட்டி, கூட்டக்காரன்பட்டி, கவுண்டனூர், சி.அம்மாபட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 32 ஆதிதிராவிட மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிப்பதற்கு சேர்ந்துள்ளனர். ஆனால் பயமுறுத்தும் விடுதி கட்டிடத்தால் தங்கி படிக்க முடியாமல் காலை, மதியம், மாலை என 3 வேளைகள் மட்டும் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்று விடுகின்றனர்.

இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பீல் கட்டப்பட்ட இவ்விடுதி கட்டிடம் மாணவர்கள் தங்கி படிக்க முடியாத நிலையில் உள்ளது. இதனை முழுமையாக இடித்து விட்டு புதிய கட்டிடம் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆதிதிராவிட வீட்டு வசதி கழகம் (தாட்கோ) அதிகாரிகள் இவ்விடுதியை ஆய்வு செய்து, கட்டிடத்தன்மை குறித்து பொதுப்பணித்துறைக்கு பரிந்துரை செய்தனர். ஆனால் பொதுப்பணித்துறையினர் இதுவரை ஆய்வு செய்யாமல் கிடப்பில் போட்டு புதிய கட்டிட பணிகளை துவங்குவதாக இழுத்தடித்து வருகின்றனர். எனவே மாணவர்கள் நலன் கருதியும், அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்கும் முன்பும் சேதமடைந்துள்ள ஆதிதிராவிடர் விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர மாவட்ட கலெக்டர் வினய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

× RELATED குஜிலியம்பாறையில் ‘விரிசல்’ விடுதி...