×

காலிக்குடத்துடன் அலையும் சூழலில் தினமும் பல்லாயிரம் லிட்டர் வீணாகும் காவிரி குடிநீர்

மேலூர்: மேலூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் தண்ணீர் தேடி அலையும் மக்கள் ஒருபக்கம் என்றால் குழாய்கள் உடைந்து தினசரி பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகும் அவலமும் நடக்கிறது. கடும் குடிநீர் பஞ்சத்தில் ஆண்டுதோறும் தவித்த சில மாவட்ட மக்களுக்கு வரபிரசாதமாக அமைந்தது காவிரி கூட்டு குடிநீர் திட்டம். இதற்காக திருச்சி மாவட்டம் கரூரில் இருந்து ராட்சத குழாய்கள் 200 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டு தினசரி தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இவற்றை கண்காணிக்க ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு அலுவலகம் அமைக்கப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினசரி பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் சேதம் ஏற்பட்டு, தண்ணீர் கசிகிறதா, குடிநீர் வால்வுகளில் சேதம் உள்ளதா, குழாய்களை உடைத்து தண்ணீர் திருடப்படுகிறதா, மொத்தத்தில் தண்ணீர் வீணாகாமல் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

ஆனால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதை கண்டுகொள்வதே இல்லை. பத்திரிகைகளில் தண்ணீர் வீணாவது குறித்து செய்தி வெளியான பிறகே அவற்றை சீர் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலூர் அருகே கல்லம்பட்டியில் சாலையோரம் உள்ள காவிரி கூட்டு குடிநீர் குழாயின் வால்வு உடைந்து, தினசரி பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. பல நாட்கள் இப்படி தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருவதால் அருகில் உள்ள வயல்வெளிகளில் பாய்ந்து அந்த இடத்தில் புதிய குளமே உருவாகி விட்டது. உடனடியாக இதை சரி செய்து வீணாகும் குடிநீரை பொதுமக்களுக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Cauvery ,tens of thousands , Cauvery, drinking water
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி