சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் தண்ணீர் எடுக்கும் லாரிகள் எத்தனை?: அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தண்ணீர் எடுக்க எத்தனை லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டர்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னை நங்கநல்லூரை சேர்ந்த இளையராஜா, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நங்கநல்லூர் மற்றும் பழவந்தாங்கலைச் சுற்றிலும்  சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றி, தண்ணீர் இல்லாமல் பொதுமக்களை கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த மனு ஏற்கனவே நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை அதிகாரிகள்  பதிலளிக்கவும், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சொந்த தேவைக்காக மட்டுமே நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதாகவும், சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படவில்லை எனவும் பழவந்தாங்கல் காவல் ஆய்வாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு, சட்டவிரோதமாக தண்ணீரைத் திருடி லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுவதாக மனுதாரர் தரப்பில் புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அதையடுத்து நீதிபதிகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படவில்லை என எந்த அடிப்படையில் காவல்துறை  அறிக்கை தாக்கல் செய்துள்ளது என கேள்வி எழுப்பி, இதுதொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். பின்னர் தண்ணீர் எடுத்துச் செல்ல எத்தனை லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது?.  இந்த லாரிகளுக்கு அனுமதி வழங்குவது யார்?. என்பது குறித்தும், அந்த லாரிகளின் விவரங்கள் குறித்தும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 28க்கு தள்ளிவைத்தனர். மேலும், வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், அனைத்து விசயங்களிலும் காவல்துறை தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் சமுதாயத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டும், இதுவரை அமல்படுத்தவில்லை. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை காவல்துறை  அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுத்துவர் என்ற நம்பிக்கையில் துணை ஆணையர் அல்லது இணை ஆணையர் அளிக்கும் விவரங்களை ஏற்று வருகிறோம். ஆனால் நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை என்றால் காவல்துறை ஆணையரிடம் தான் விளக்கம்  கேட்க நேரிடும் என கருத்து தெரிவித்தனர்.Tags : districts ,Chennai ,Tiruvallur ,Kanchipuram , districts ,Chennai, Kanchipuram ,Tiruvallur,carry water?
× RELATED கோடை காலத்திற்கு முன்பே சட்ட விரோதமாக தண்ணீர் உறிஞ்சும் டேங்கர் லாரிகள்