தமிழக பிரச்னைகளை அனுப்பினால் சட்டமன்றத்தில் திமுக குரல் எழுப்பும்: மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு மின்னஞ்சல் முகவரியும் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் நிலவும் பிரச்னையை அனுப்பினால் சட்டமன்றத்தில் திமுக குரல் எழுப்பும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் பிரச்னையை அனுப்ப மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 28ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டம் வருகிற ஜூலை 30ம் தேதி வரை நடக்கிறது. கூட்டத்தில் ஒவ்வொரு துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி, அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளை பொதுமக்கள் அனுப்பினால் அதை சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் எதிரொலிப்பார்கள் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:குடிநீர் பஞ்சம் தொடங்கி வேலையில்லாத் திண்டாட்டம் வரை தமிழகத்தில் நிலவும் ஒவ்வொரு பேரவலமும் வரும் சட்டமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படுவதை திமுக உறுதி செய்யும். உடனடி கவனம் பெற வேண்டிய பிரச்னை என நீங்கள் கருதுவதை VoiceofTN@dmk.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Tags : DMK ,Assembly ,Tamil Nadu , send problems,Tamil Nadu, DMK Voice,release
× RELATED தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு