தனியார் தண்ணீர் லாரிகள் நியாயமான கட்டணம் வசூலிக்க வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுரை

சென்னை: தனியார் தண்ணீர் லாரிகள் நியாயமான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளார். தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக தனியார் குடிநீர் டேங்கர் லாரி உரிமையாளர் சங்க பிரதிநிதிகளுடன் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று  ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிகரன்,  போக்குவரத்து கூடுதல்  போலீஸ் கமிஷனர் அருண், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், தமிழ்நாடு தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் நிஜலிங்கம் மற்றும் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

இதில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, லாரி உரிமையாளர்கள் வாகனத்தின் டீசல் செலவு, ஓட்டுநரின் சம்பளம், சுங்கவரி, இதர செலவுகள் உள்ளடக்கி நியாயமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும். ஒரு சில இடங்களில்  கட்டணங்கள் அதிகம் எனறு பொதுமக்கள் கருதுவதால், அவற்றை  உடனடியாக குறைக்க வேண்டும் என்றும், கல்குவாரிகளிலிருந்து நீர் எடுக்க கூடாது என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய தனியார் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள், தாங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதில்லை என்றும், ஒரு சில இடங்களில் இதுபோன்ற புகார்கள் வந்தால் சங்கத்தின் சார்பாக உடனடியாக நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.
Tags : Private, water trucks,, Minister, SP Velumani advised
× RELATED அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் முதல்வர் பழனிசாமி?