×

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் எத்தனை போலீஸ்காரர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது?: டி.ஜி.பி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை போலீஸ்காரர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், குற்ற வழக்கு பதிவு செய்யாமல் எத்தனை பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளது என்பது குறித்தும் போலீஸ்  டி.ஜி.பி மற்றும் கோவை எஸ்.பி 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆணைய நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.கோவை மேட்டுப்பாளையத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏட்டு சுரேஷ், போலீஸ்காரர் பழனிசாமி ஆகியோர் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது நள்ளிரவில் ஒரு ஆணும், பெண்ணும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து, அவர்களிடம்  விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர், நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் கேட்டுள்ளனர். இதை தொடர்ந்து அந்த ஜோடி, ₹10 ஆயிரம் பணத்தை கொடுத்து விட்டு போலீசார் பிடியில் இருந்து தப்பியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஏட்டு சுரேஷ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

போலீஸ்காரர் பழனிசாமி கோவை ஆயுதப்படைக்கு தற்காலிக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பெரியநாயக்கன் பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை செய்தார்.பின்னர், சம்பந்தப்பட்ட ஏட்டு மற்றும் போலீஸ்காரர் மீது ஏன் குற்ற வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும், அவர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யாத போலீஸ் அதிகாரி மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி  எழுப்பினார். இதுகுறித்து, கோவை போலீஸ் சூப்பிரண்டு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று, மாமூல் வசூலித்ததாக கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை போலீஸ்காரர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும், குற்ற வழக்கு பதிவு செய்யாமல் எத்தனை பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில்  உள்ளது என்பது குறித்தும் போலீஸ் டி.ஜி.பி மற்றும் கோவை எஸ்.பி 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, வழக்கின் விசாரணையை ஜூலை 30ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.மாமூல் வசூலித்ததாக கடந்த 5 ஆண்டுகளில்
எத்தனை போலீஸ்காரர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும், குற்ற வழக்கு பதிவு செய்யாமல் எத்தனை பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளது என்பது குறித்தும் போலீஸ் டி.ஜி.பி மற்றும் கோவை  எஸ்.பி
4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

Tags : policemen ,Tamil Nadu ,Human Rights Commission , 5 years ,Tamil Nadu, criminal record , registered , DGP report
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்