×

காவிரி நீரை கர்நாடகம் சட்டவிரோதமாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு நீர் ஆண்டு கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து கடந்த 21ம் தேதி வரையிலான 3 வாரங்களில் மட்டும் கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய நான்கு அணைகளில் இருந்து 2.544 டி.எம்.சி  தண்ணீரை கர்நாடகம் பயன்படுத்தி இருக்கிறது.  கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் இப்போது வரை மேற்கண்ட 4 அணைகளுக்கும் 1.814 டி.எம்.சி நீர் மட்டுமே வந்துள்ள நிலையில், அந்த நீரையும் ஏற்கனவே அணைகளில் இருந்த நீரையும்  சட்டவிரோதமாக  தனது பாசனத் தேவைகளுக்காக கர்நாடகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இது பெரும் அநீதியாகும்.

ஜூன் மாதத்தில் தமிழகத்தின் பங்காக 9.19 டி.எம்.சி. தண்ணீர் திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டுள்ளது. ஆனால், அதை செய்யாமல் கர்நாடக அரசு அணைகளில் உள்ள நீரை தன்னிச்சையாக பயன்படுத்திக்  கொள்வதுடன், மாநிலம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள ஏரிகள் மற்றும் குளங்களிலும் சேமித்து வைக்கிறது. இது சட்டவிரோதமான செயல்.  இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு காவிரி நீரை கர்நாடகம் சட்டவிரோதமாக  பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றில் உள்ள அனைத்து அணைகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கவும் அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Ramadas ,government ,Karnataka ,Cauvery , Cauvery water, central government,p using:
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...