×

உள்ளகரம் - மேடவாக்கம் சாலையில் மின்கம்பங்களில் தொங்கும் மரக்கட்டைகளால் விபத்து: வாகன ஓட்டிகள் அச்சம்

ஆலந்தூர், ஜூன் 25: உள்ளகரம் - மேடவாக்கம் சாலையில் உள்ள மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்கள் சார்பில் கட்டப்படும் விளம்பர பேனர்கள் உடைந்து, மரக்கட்டைகள் ஆபத்தான முறையில் தொங்குவதால், அவற்றை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உள்ளகரம் - மேடவாக்கம்  சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையில் செல்வதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதில், ஆலந்தூர் பகுதி சாலையில்  100க்கும் மேற்பட்ட  மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின் கம்பங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், வியாபார நிறுவனங்களை சார்ந்தவர்கள் தங்களது விளம்பர தட்டிகள் மற்றும் பேனர்களை இரவோடு இரவாக கட்டி  தொங்க விட்டு சென்று விடுகின்றனர்.

இதற்காக மின் வாரியத்திடமோ, மாநகராட்சியிடமோ எந்தவித அனுமதி மற்றும் கட்டணம் செலுத்துவதில்லை. இவ்வாறு கட்டப்படும் பேனர்களை அதிகாரிகள் உடனுக்குடன் அகற்றாததால், காற்றில் கிழிந்து தொங்குகின்றன. மேலும், பஸ், லாரி போன்ற வாகனங்களில் உரசி உடைந்து ஆபத்தான முறையில் மரக்கட்டைகள் தொங்குகின்றன. இவை, வாகன ஓட்டிகள் மீது விழும் நிலை உள்ளதால், பீதியுடன் செல்கின்றனர். எனவே, மின் கம்பங்களில் தொங்கும் இந்த மரக்கட்டைகளை   உடனடியாக அகற்றவும், அனுமதியின்றி விளம்பர பேனர்களை கட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Accidents ,road , Internal - Medavakam road, wiring, accident
× RELATED இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி