×

குடிநீர் வழங்காத அதிமுக அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தாம்பரம்: சென்னையில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத தமிழக அரசை கண்டித்து காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தாம்பரம், சண்முகம் சாலையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா வரவேற்றார். பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், திருப்போரூர் எம்எல்ஏ செந்தில் இதயவர்மன், முன்னாள் எம்எல்ஏ மீ.அ.வைதியலிங்கம், மாவட்ட பொருளாளர் எஸ்.சேகர், மாவட்ட துணை செயலாளர் கலைவாணிகாமராஜ், தாம்பரம் காமராஜ், செல்வகுமார், ஜோதிகுமார், ஆதிமாறன், குறிஞ்சி சிவா, செம்பாக்கம் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

பின்னர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு வரும் என்று உணர்ந்து கலைஞர் ஆட்சியில் முன்கூட்டியே அதிகாரிகளை அழைத்து கூட்டம் கூட்டி அதற்கு நிதி ஆதாரத்தை தந்து தண்ணீர் பிரச்சனை இல்லாமல் செய்யப்பட்டது. ஆனால், இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு, சென்னை நகரங்களிலே ஓட்டல்கள், பள்ளிகள் எல்லாம் மூடுகின்ற ஒரு நிலைமை. ஆனால், தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றது. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தெரிவித்த பிறகு மூன்று நாட்களுக்கு முன்பு தான் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு இன்று நிதி ஆதாரத்தை உயர்த்தியிருக்கிறார்கள். இனிமேல் இந்த நிதியை எடுத்து சென்று எப்போது தண்ணீர் பெற்று மக்களுக்கு கொடுப்பார்கள் என தெரியவில்லை. இப்படிப்பட்ட ஒரு கேடு கெட்ட நிலையில் அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : protests ,DMK ,government ,AIADMK , Drinking water, AIADMK, DMK, demonstration
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்