கோவை அருகே கிணற்றில் வீசி பெண் குழந்தை கொலை: தாய், தந்தை உறவினர்களிடம் விசாரணை

கோவை:  கோவை அன்னூர் அடுத்த கரியகவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ் (29). பொக்லைன் இயந்திர டிரைவர். இவரது மனைவி காஞ்சனா. இவர் விளாங்குறிச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ருதா என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் இரவு கனகராஜ் வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளனர். அதிகாலை 3.45 மணிக்கு காஞ்சனா எழுந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. வீடு முழுவதும் தேடியும் கிடைக்காததால் அழுது சத்தம் போட்டுள்ளார். உடனே கனகராஜ் மற்றும் உறவினர்கள் எழுந்து தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் வீட்டில் இருந்து சுமார் 500மீட்டர் தொலைவில் உள்ள பாழடைந்த கிணற்றில் குழந்தையின் உடல் மிதப்பதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். உடனடியாக உறவினர்கள் அங்கு சென்று கிணற்றுக்குள் இறங்கி குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 இது குறித்த தகவலின் பேரில் மருத்துவமனைக்கு சென்ற பீளமேடு போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் தான் குழந்தை இறந்தற்கான முழு காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக  கனகராஜ், காஞ்சனா மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  கோவையில் இரண்டரை வயது பெண் குழந்தை கிணற்றுக்குள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Investigation ,Coimbatore ,relatives , Coimbatore, murder of girl child, mother, father, investigation
× RELATED சேலம் அருகே வாய் தகராறில் பெண்ணை...