×

அடையாள சான்றுக்கு கட்டாயமாக்கும் ஆதார் சட்டத்திருத்த மசோதா தாக்கல்

புதுடெல்லி: அடையாள சான்றாக ஆதாரை கட்டாயமாக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 17வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டம் கடந்த 17ம் தேதி தொடங்கியது. இதில், கடந்த 20ம் தேதி நடந்த கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். பின்னர், முதல் சட்டமாக முத்தலாக் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. வார விடுமுறையைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று மீண்டும் கூடியது.

இதில், மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆதார் சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்எஸ்பி கட்சி எம்பி பிரேம்சந்திரன், ‘‘இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் செயலாகும். மேலும், ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவது அடிப்படை உரிமையை குறிப்பாக தனிமனித உரிமையை மீறுவதாகும்’’ என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘‘நாட்டின் நலன் கருதி கொண்டு வரப்பட்ட சட்டம் ஆதார். இது தனி மனித உரிமையை எந்த வகையிலும் பாதிக்காது. ஆதார் கட்டாயமில்லாத நிலையிலும் 60 கோடி மக்கள் செல்போன் சிம்கார்டு வாங்க ஆதார் எண் பயன்படுத்தி உள்ளனர். மக்களே ஆதாரை ஏற்றுக் கொண்டுள்ளனர்’’ என்றார்.

இந்த சட்ட திருத்தத்தின்படி, வங்கி சேவை மற்றும் செல்போன் சிம் கார்டு வாங்குவது உள்ளிட்ட சேவைகளுக்கு அடையாள சான்றாக ஆதார் கட்டாயமாக்கப்படும். ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்தும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி வரை அபாரதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். ஆதார் தகவல்களை திருடுவோருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் இம்மசோதா வழிவகை செய்கிறது. இதே போல, ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிசன் ரெட்டி தாக்கல் செய்தார். இம்மசோதாவை, பாஜ தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தனது முதல் மசோதாவாக தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அவையில் இருந்த போதிலும், இம்மசோதாவை இணை அமைச்சர் கிசன் ரெட்டி தாக்கல் செய்தார்.

இம்மசோதா மூலம் காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையை ஒட்டி 10 கிமீக்குள் வாழும் மக்களுக்கு அரசு பணி, கல்வி உள்ளிட்டவற்றில் இடஒதுக்கீடு வழங்கப்படும். மேலும் சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார்.இதையடுத்து, இரு அவையிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடும் காரசாரமாக நடந்தது. இதனால் மாநிலங்களவையின் அலுவல் நேரம் இரவு 7.10 மணி வரையிலும், மக்களவையின் அலுவல் நேரம் இரவு 8 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆளும் பாஜ அரசை கடுமையாக விமர்சித்து கருத்துகள் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

‘புதிய வேலைவாய்ப்பை உருவாக்காத பாஜ அரசு’
மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசுகையில், ‘‘காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். பல ஆண்டாக கிடப்பில் உள்ள மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும். கடந்த 5 ஆண்டில் பாஜ அரசு புதிய வேலைவாய்ப்பை உருவாக்க எதுவும் செய்யவில்லை. தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்’’ என்றார்.

‘கோயில் சிலைகள் விவரம்ஆவணப்படுத்த வேண்டும்’
முதல் முறையாக மக்களவை எம்பியான திமுகவின் கனிமொழி பேசுகையில், ‘‘தமிழகத்தில் உள்ள கோயில்களில் பழமையான சிலைகள் பழம்பெரும் கலைப் பொருட்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் எந்தெந்த கோயில்களில் என்னென்ன பழங்கால சிலைகள் இருக்கின்றன என்பதற்கு முழுமையான பதிவுகளோ ஆவணங்களோ இல்லை. அவற்றை ஆவணப்படுத்தி கோயில் சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். மேலும் தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதையும் அவர் சுட்டிக்காட்டி பேசினார்.

நிலம் கையகப்படுத்துவது பெரிய பிரச்னையாக உள்ளது
மாநிலங்களவையில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘சாலை அமைக்கும் பணியில் நிலம் கையகப்படுத்துவதே பெரிய பிரச்னையாக உள்ளது. இதற்கான செலவு மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. சில மாநிலங்களில் நிலத்தின் மதிப்பு அதிகளவில் உள்ளது. அதே சமயம், இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு சில மாநில அரசுகளும் உதவ முன்வருகின்றன. உதாரணமாக, உத்தரப்பிரதேசத்தில் கையகப்படுத்தும் நிலத்திற்கான செலவில் 50 சதவீதத்தை அம்மாநில அரசு ஏற்றுள்ளது. இதன் மூலம் விரைவில் சாலைத் திட்டங்களை அமல்படுத்த முடியும். இதே போல அனைத்து மாநில அரசுகளும் நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்றார்.

Tags : Identity proof, Aadhaar law, bill filing
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்