×

மபி.யில் பாஜ ஆட்சிக்கு வர மக்கள் விரும்புகிறார்கள்: சிவராஜ் சவுகான் பேட்டி

லக்னோ: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ தோல்வி அடைந்தது. இம்மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், அடுத்த 5 மாதத்தில் நடந்த மக்களவை தேர்தலில் 3 மாநிலத்திலும் பாஜ 50 சதவீத வாக்குகளை அள்ளி அமோக வெற்றி பெற்றது.  இந்த வெற்றி குறித்து மத்தியப் பிரதேச முன்னாள் பாஜ முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மக்களவை தேர்தல் சில கட்சிகளின் மூடிய கண்களை திறக்க வைத்துள்ளது. பரம்பரை ஆட்சி, சாதி அரசியலுக்கு முடிவு கட்டி உள்ளது. சாதி, மதத்தை தாண்டி வளர்ச்சிக்காகவும், நாட்டு நலனுக்காகவும் மக்கள் வாக்களித்துள்ளனர். குறிப்பாக, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பின் பாஜ எடுத்த சரியான நடவடிக்கைகள் மக்களவை தேர்தலில் வெற்றி தேடித் தந்தன.

இம்மாநிலங்களில் வெற்றி மயக்கத்திலேயே காங்கிரஸ் இருந்தது. நாங்கள் எடுத்த சரியான நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆசி வழங்கியதைத் தான் இந்த வெற்றி நிரூபிக்கிறது. சட்டப்பேரவையில் வென்றதால் மக்களவையிலும் வென்று விடலாம் என காங்கிரஸ் தப்புக் கணக்கு போட்டது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் உள்நோக்கம் எனக்கில்லை. அப்படி இருந்திருந்தால், முதலிலேயே அவர்களை ஆட்சி அமைக்க விட்டிருக்க மாட்டோம். காங்கிரசை போல சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் மற்றும் சுயேச்சைகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க எங்களுக்கும் அழைப்புகள் வந்தன. ஆனால் எங்களை விட அதிக தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருந்தது. எனவே ஆட்சி அமைக்கும் உரிமை அவர்களே உண்டு என்பதால் நாங்கள் தலையிடவில்லை. தற்போது மபியில் நாங்கள் தொடங்கிய திட்டங்களை எல்லாம் காங்கிரஸ் அரசு நிறுத்திவிட்டது. விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

 சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கடந்த 4 மாதத்தில் புரோக்கர்களின் கூடாரமாக மபி திகழ்கிறது. ஒட்டுமொத்த மாநிலமும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் பாஜ-காங்கிரஸ் ஆட்சியின் வேறுபாட்டை மக்கள் உணர்ந்துள்ளனர். எனவே, விரைவிலே பாஜ.வே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Baja ,Mabi ,Shivraj Chauhan , Madhya Pradesh, bjp rule, Shivraj Chauhan
× RELATED வடமாநில நபர்களின் வாக்குகளை...