×

மாநிலங்களவையில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நதி நீரை இணைக்க வேண்டும்: உடனடி நடவடிக்கைக்கு எம்.பிக்கள் கோரிக்கை

புதுடெல்லி: மாநிலங்களவையில் குடிநீர் பிரச்னையை எம்பிக்கள் எழுப்பினர். அப்போது, நதிகள் இணைப்பு மற்றும் மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றி மக்கள் அல்லல்படுகின்றனர். அதோடு, அடுத்த ஆண்டில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உட்பட 21 நகரங்களில் நிலத்தடிநீர் முழுவதுமாக வற்றிவிடும் என்ற நிதி ஆயோக் அறிக்கை, பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னை நாடாளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. குடிநீர் பிரச்னை தொடர்பாக மக்களவையில் எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.

சத்திய நாராயண் ஜதியா (பாஜ): மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் வழக்கமாக தண்ணீர் பற்றாக்குறை நிலவும். ஆனால் இந்த முறை புதிதாக சில மாநிலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும். இதற்காக 5 பெரிய நதிகளை இணைத்து, உபரி நீரை தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்லலாம்.  ரேவதி ராமன்சிங் (சமாஜ்வாடி கட்சி): தண்ணீர் பிரச்னைக்கு உடனடியாக அவசர தீர்வு காண வேண்டும். மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் பருவமழையை சேகரித்து நிலத்தடி நீரை உயர்த்த முடியும்.

இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர். இதற்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கைய நாயுடு கூறுகையில், ‘‘அவையில் எழுப்பப்பட்டுள்ள இந்த பிரச்னை மிக முக்கியமானது. இதுபற்றி குறுகிய கால விவாதத்துக்கு நோட்டீஸ் அளித்தால் அனுமதி அளிக்க தயாராக இருக்கிறேன் அல்லது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தாலும் பரிசீலிக்கிறேன். உறுப்பினர்கள் தங்களுக்குள் கலந்து பேசி நோட்டீஸ் அளிக்கலாம்’’ என்றார்.  இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர் டி.சுப்பராமி ரெட்டி பேசுகையில், ‘‘குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கைகளை மேற்ெகாள்ள வேண்டும். இல்லாவிட்டால் சுற்றுச்சூழல், பொருளாதாரம் பாதிக்கப்படும்’’ என்றார்.

Tags : Rivers ,MPs , States, States, Drinking Water and Rivers
× RELATED நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கைகள் தினவிழா