×

ஒருவரை தீவிரவாதியாக அறிவிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம்: 2 சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: தீவிரவாத வழக்குகளை விசாரிப்பதில், தேசிய புலனாய்வு அமைப்புக்கு(என்ஐஏ) கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் இரண்டு சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப்பின், தீவிரவாத வழக்குகளை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) கடந்த 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. புதிய சவால்களை எதிர்கொள்ள என்ஐஏ அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஆலோசித்து வருகிறது. இதற்காக என்ஐஏ சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்(யுஏபிஏ) ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தில் வரும் நாட்களில் தாக்கல் செய்யப்படவுள்ளது. தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் ஒரு நபரை தீவிரவாதியாக கருதி நடவடிக்கை எடுக்கும் வகையில், யுஏபிஏ சட்டத்தின் 4வது பிரிவில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.

இதுவரை அமைப்புகளை மட்டுமே, தீவிரவாத அமைப்புகளாக கருத என்ஐஏவுக்கு அதிகாரம் உள்ளது. இந்த திருத்தம் செய்வதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது.
இதேபோல் டிஎன்ஏ தகவல் வங்கியை தொடங்குவதற்காக சட்ட மசோதாவுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டபோதும், அது மாநிலங்களவையில் நிறைவேறாததால் காலவதியானது. அதனால் தற்போது மீண்டும் கொண்டு வரப்படுகிறது. இதன்படி மத்திய, மாநில அளவிலான டிஎன்ஏ தகவல் மையங்கள் அமைக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்படும். இந்த தகவலால் எளிதாக குற்றவாளிகளை அடையாளம் காண முடியும்.
வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு பதிலி ஓட்டு முறை வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்கான மசோதாவை அறிமுகம் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது.

ஆனால் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்க முடியவில்லை. இதேபோன்ற மசோதா கடந்த 16வது மக்களவையுடன் காலாவதியாகிவிட்டது.  பதிலி ஓட்டு முறை தற்போது பாதுகாப்பு படையினருக்கு மட்டும் உள்ளது.
வீரர்களின் மனைவிகளும், பாதுகாப்பு படையைச் சார்ந்த வாக்காளராகவே தற்போது கருதப்படுகிறார். ஆனால் ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளின் கணவர்கள் அவ்வாறு கருதப்படுவதில்லை. இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் பாதுகாப்பு படையினரின் மனைவி என்ற வார்த்தைக்கு பதில் வாழ்க்கைத் துணை என திருத்தம் கொண்டுவரும் திட்டமும் மத்திய அரசிடம் உள்ளது. ஆனால் இது குறித்து நேற்று விவாதிக்கப்படவில்லை.

Tags : National Intelligence Agency ,Cabinet , National Intelligence Agency, 2 Law Amendment, Cabinet Approval
× RELATED தேசிய புலனாய்வு முகமையின் தலைவராக...