நாக்-அவுட் சுற்றில் இங்கிலாந்து: பிரேசில் அதிர்ச்சி

பாரிஸ்: பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட இங்கிலாந்து அணி தகுதி பெற்றது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் (ரவுண்ட் ஆப் 16) கேமரூன் அணியுடன் மோதிய இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின் ஹவுட்டன் (14வது நிமிடம்), ஒயிட் (45’+4’), கிரீன்வுட் (58’) ஆகியோர் கோல் அடித்தனர். கேமரூன் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினாலும், பதற்றத்தால் பல கோல் வாய்ப்புகளை வீணடித்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

மற்றொரு போட்டியில் பிரான்ஸ் - பிரேசில் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், 90 நிமிட ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்ததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் பிரான்ஸ் அணி அபாரமாக கோல் அடித்து கால் இறுதிக்கு முன்னேறியது. பிரான்ஸ் சார்பில் வேலரி காவின் 52வது நிமிடத்திலும், அமாண்டின் ஹென்றி 107வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பிரேசில் வீராங்கனை தெய்சா 63வது நிமிடத்தில் கோல் போட்டார்.

Tags : England ,Brazil , Knock-out, UK, Brazil
× RELATED இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் 2ம்...