×

சட்டப்பேரவையில் சபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கையில்லா தீர்மானம்?: சபாநாயகர் தனபால் பேட்டி

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 28ம் தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை 23 நாட்கள் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி என் மீது (சபாநாயகர் தனபால்) நம்பிக்கையில்லா  தீர்மானம்  விதிகளின்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான  அஜென்டா அன்றைக்கு வெளியிடப்படும் என்றும் சபாநாயகர் தனபால் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 28ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு நடத்தப்படும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்கான இந்த கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது, என்னென்ன  தேதிகளில் எந்த மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்வதற்காக, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று மதியம் 12  மணிக்கு நடைபெற்றது. கூட்டம் 45 நிமிடம் நடந்தது.இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், திமுக சார்பில் எதிர்க்கட்சி துணை  தலைவர் துரைமுருகன், கொறடா சக்கரபாணி, துணை கொறடா பிச்சாண்டி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பிறகு சபாநாயகர் தனபால் நிருபர்களிடம் கூறியதாவது:சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு அலுவல் ஆய்வு குழு தீர்மானங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளது. அதன்படி, 28ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர்கள் கனகராஜ் (அதிமுக), ராதாமணி (திமுக) ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு, தீர்மானம் நிறைவேற்றப்படும். 29 மற்றும் 30ம் தேதி அரசு விடுமுறை. மீண்டும் ஜூலை 1ம் தேதி சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், முதல்  மானிய கோரிக்கையாக வனத்துறை, சுற்றுச்சூழல் என இரண்டு மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். 2ம் தேதி பள்ளி கல்வி துறை, உயர் கல்வி, 3ம் தேதி கூட்டுறவு, உணவு, 4ம் தேதி எரிசக்தி, 5ம் தேதி மீன்வளம், கால்நடை,  பால்வளம், 6, 7ம் தேதி அரசு விடுமுறையாகும்.8ம் தேதி உள்ளாட்சி, 9ம் தேதி சட்டத்துறை, 10ம் தேதி சமூகநலம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, 11ம் தேதி தொழில் துறை, சிறு, குறு, நடுத்தர தொழில், 12ம் தேதி கைத்தறி, செய்தி மற்றும் விளம்பரம், 13, 14ம் தேதி அரசு விடுமுறை,15ம் தேதி நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, 16ம் தேதி மக்கள் நல்வாழ்வு, 17ம் தேதி வேளாண்மை, 18ம் தேதி சுற்றுலா, இந்து அறநிலையத்துறை, 19ம் தேதி வருவாய், 20, 21ம் தேதி அரசு விடுமுறை.

22ம் தேதி காவல் துறை, தீயணைப்பு, 23ம் தேதி வணிகவரித்துறை, தகவல் தொழில்நுட்பம், 24ம் தேதி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, 25ம் தேதி போக்குவரத்து, 26ம் தேதி ஆதிதிராவிடர் நலத்துறை, கதர், 27, 28ம் தேதி அரசு விடுமுறை.29ம் தேதி பொதுத்துறை, மாநில சட்டமன்றம், நிதித்துறை, நகர்ப்புற வளர்ச்சி, 30ம் தேதி அரசினர் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்பட்டு பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும். அதன்படி மொத்தம் 23  நாட்கள் சட்டமன்றம் நடைபெறுகிறது. தினசரி காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும்.சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி முறைப்படி விதிகளின்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இருக்கிறது. ஆகவே, அதற்கான அஜென்டா அன்றைக்கு (ஜூலை 1ம் தேதி) வெளியிடப்படும். இன்றைய தினம்தான்  இதுகுறித்து எப்போது விவாதம் நடைபெறும் என்பது தெரியவரும். நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் பெற்றதாக எந்த தகவலும் எனக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துள்ளார். அதன்படி, ஜூலை 1ம் தேதி சட்டமன்ற அஜென்டாவில் இது இடம் பெறும் என்று சபாநாயகரே அறிவித்துள்ளதால் அன்றைய தினமே  இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சட்டப்பேரவை செயலக உயர் அதிகாரிகள் கூறினர். அதே நேரம் திமுக சார்பில் இந்த அஜென்டாவை உடனே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று  வலியுறுத்தாவிட்டால், தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது.

Tags : Thanapal ,Speaker ,Parliament ,interview , Speaker , Commons, No-confidence,Speaker ,Tanabal
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...