×

பஸ், பயணிகள் புறக்கணிப்பால் பயனற்று கிடக்கும் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட்: இரவுநேர பாராக மாறிய அவலம்

சிவகாசி: திருத்தங்கல்லில் ரூ.3.50 கோடியில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட்டை பயணிகள், பஸ்கள் புறக்கணித்து வருவதால் பயனற்று கிடக்கிறது. இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்டை ‘குடி’மகன்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர். திருத்தங்கல் இடநெருக்கடி மிகுந்த பகுதி. ரோடுகள் குறுகியளவில் இருப்பதே இதற்கு காரணம். காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள், மாணவர்கள் தினமும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.  பஸ் ஸ்டாப்களில் பயணிகளை ஏற்ற ஒரு நிமிடம் பஸ் நின்றாலும், மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணி வகுத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.

நெருக்கடியை குறைக்க நகரின் மைய பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதன்படி திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாய் அருகில் ரூ.3 கோடி 45 லட்சம் செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.  இடம் கிடைப்பத்தில் சிக்கல் ஏற்பட்டதால் நகர் மத்தியில் இருந்து சற்று தொலைவில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. நகர் ஒதுக்குப்புறத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைந்தது மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. பஸ் ஸ்டாண்டில் இருந்து  நகருக்கு பயணிகள் வந்து செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலும் காளியம்மன் கோயில், நின்ற நாராயண பெருமாள் கோயில் எதிரில் இருக்கும் பஸ் ஸ்டாப்களில் நின்று ஏறி செல்கின்றனர். இந்த பஸ் நிறுத்தங்களே  பயணிகளுக்கு வசதியாக இருந்து வருகிறது.

 இவற்றை கடந்து பஸ் ஸ்டாண்ட் வரவேண்டுமென்றால் ஆட்டோ பிடித்து தான் வரமுடியும். இது பயணிகளுக்கு பண விரையத்தை ஏற்படுத்துகிறது. ஆரம்ப காலகட்டங்களில் பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. இதுவும்  நாளடைவில் நின்று போனது. மதுரை, விருதுநகர் செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் உள்ளே வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டது. மற்ற வெளியூர் பஸ்களும் வந்து சென்றன. தற்போது எந்த பஸ்களும், பஸ் ஸ்டாண்டிற்குள் செல்வது  கிடையாது. தனியார் பஸ்கள் ஏதும் உள்ளே வருவதே இல்லை. இதனால் பயணிகள், பஸ்கள் இன்றி பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்படுகிறது. பல கோடி செலவில் கட்டப்பட்ட  பஸ் ஸ்டாண்ட் பயனற்று கிடக்கிறது.  இரவு நேரத்தில் பாராகவும், திருடர்களின் புகலிடமாகவும் பஸ் ஸ்டாண்ட் மாறி வருகிறது. பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Bus, Passenger, Correctional Bus Stand, Nighttime
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...