×

2ம் படைவீட்டில் தொடரும் அவலம்...திருச்செந்தூர் சன்னதி தெருவில் 2வது நாளாக கழிவுநீர் வெள்ளம்: பக்தர்கள் திண்டாட்டம்; பேரூராட்சி தூக்கம்

உடன்குடி: திருச்செந்தூர் சன்னதி தெருவில் 2வது நாளாக பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் பக்தர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு முருகனை வழிபட தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில்  இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். மேலும் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கழிவறைகள் கட்டப்பட்டிருந்தாலும்  முறையாக பராமரிப்பது கிடையாது. முழுமையடையாத பாதாள சாக்கடை திட்டத்தினால் திருச்செந்தூர் மக்கள் மட்டுமின்றி கோயிலுக்கு வரும் பக்தர்களும் தினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

கோயிலின் நுழைவுப் பகுதியில் உள்ள தூண்டிகை விநாயகர் கோயில் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான கழிவறைகள் தொட்டிகள் உள்ளன. முறையான பராமரிப்பின்றி இருப்பதால் அவ்வப்போது கழிவறை தொட்டிகள் நிரம்புவதும்,  அதன் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதும் வாடிக்கையான ஒன்றாக நிகழ்ந்து வருகிறது. நேற்று மாலை திடீரென கழிவுநீர் தொட்டிகள் நிரம்பி மனித கழிவுகள், சாக்கடை நீர் வெளியேறியது.  அந்த கழிவுநீர் தூண்டிகை விநாயகர் கோயில், சன்னதி தெரு வழியாக புளியடி தெரு வரை ஆறாக ஓடியது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்து சென்று கொண்டிருந்தனர். கழிவுநீர் கடும் தூர்நாற்றத்துடன்  வெளியேறியதால் பக்தர்கள் மூக்கை பிடித்துக் கொண்டே நடந்து சென்றனர்.

தகவலறிந்து கோயில் பணியாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள் சென்று தேங்கிய கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலையும் 2வது நாளாக கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. குழந்தைகளுடன் கோயிலுக்கு  வந்த பெண்கள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகளின் முன்பும் கழிவுநீர் தேங்கியதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை  எடுத்து கழிவுநீர் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : shrine street ,Thiruchendur ,pilgrims , Thiruchendur Shrine Street, Sewer Floods, Pilgrims, Beerwatching
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயில் நிலங்களை அளவிடும் பணி துவக்கம்