×

காதணி, திருமண விழாவிற்கு மாட்டு வண்டியில் வந்த மாமன்சீர்: பழைமை மாறாத கலாச்சாரத்தால் இளைஞர்கள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை: காதணிவிழா, மங்கள நீராட்டுவிழா, திருமணவிழா போன்றவற்றிற்கு மாமன் சீர் என்பது முக்கியமானதாகும். இந்த விழாக்களுக்கு வரும் விருந்தினர்கள் எத்தனை பெரிய பரிசுப் பொருள்களை கொடுத்தாலும், மாமன் கொண்டு  வரும் சீர்தான் விழா நடத்தும் வீட்டாருக்கு மனநிறைவைத் தரும். மாமன் சீர் விலை மதிப்பு இல்லாதது. இதேபோல் மாமன் சீர் கொண்டு வருவது என்பது தாய்மாமன்களின் கவுரவத்தை குறிக்கும் செயலாகும். சீர் கொண்டு செல்வதற்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் வருவதற்கு முன்பு முக்கிய வாகனமாக இருந்தது மாட்டு வண்டிகள்தான். முதலில் ஒற்றை மாடு பூட்டப்பட்ட கூண்டு வண்டிகளும். பின்னர் 2 மாடுகள் பூட்டப்பட்ட மாட்டுவண்டிகளும்தான்.

அப்போதெல்லாம் திருமணம் முடிந்து புதுமணத் தம்பதிகள் அலங்கரிக்கப்பட்ட கூண்டு வண்டிகளிலே வந்தாலே கிராமமே வேடிக்கை பார்க்கும். அப்போது மாமன்சீரும் மாட்டு வண்டியில்தான் வந்தது. காலமாற்றத்தால் டிராக்டர், லாரி, வேன் என சீர் எடுத்துச் செல்ல வாகனங்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. மேலும் விவசாயத்திற்கும் மாடுகளின் பயன்பாடு குறைந்ததால், மாட்டு வண்டிகளில் சீர் கொண்டு செல்லும் முறையும் மாறியது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று நடந்த ஒரு காதணி மற்றும் திருமண விழாவிற்கு குப்பக்குடி கிராமத்தில் இருந்து மாமன்சீர் கொண்டு வந்த உறவினர்கள் நாட்டியக்குதிரைகளின் ஆட்டத்துடன்,

அலங்கரிக்கப்பட்ட 3 மாட்டு வண்டிகளில் பாத்திரங்கள் போன்ற பொருட்களை ஏற்றிக் கொண்டு மாமன் மற்றும் உறவினர்கள் அலங்கரிக்கப்பட்ட அதே மாட்டு வண்டிகளில் ஏறி மண்டபத்திற்கு வந்தனர். அவர்களின் பின்னால் பல பொருள்கள் லோடு ஆட்டோவில் வந்தாலும், அப்பகுதியில் இருந்தவர்கள் பழைய காலம்போல மாட்டு வண்டியில் வந்த மாமன் சீரை ஆர்வத்துடன் பார்த்தனர். பல இளைஞர்கள் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் வந்த மாமன்சீரை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ச்சியில் உறைந்தனர். மேலும் பாரம்பரிய கலாச்சாரப்படி மாமன் சீரை மாட்டு வண்டியில் கொண்டு வந்ததை அனைவரும் பாராட்டினர்.

Tags : Mamansir ,wedding ceremony , Earrings, Wedding Ceremony, Cow Carriage, Mamanseer, Culture, Youth
× RELATED பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி...