×

மனநல ஆலோசகர்கள் இன்றி அரசு மருத்துவமனைகளில் முடங்கிய தேசிய வளர் இளம்பருவத்தினர் நலத்திட்டம்: நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வேலூர்: தமிழக அரசு மருத்துவமனைகளில் மனநல ஆலோசகர்கள் இல்லாததால் முடங்கிய தேசிய வளர் இளம் பருவத்தினர் நலத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகளவில் 10 முதல் 19 வயது வரையிலான வளர் இளம்பருவத்தினரில் 20 சதவீதம் பேர் மனநல பாதிப்புக்கு ஆளாகி வருவதாக மனநல ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வயது வந்த பெண் குழந்தைகளில் 4ல் ஒருவரும், குழந்தைகளில் 10ல் ஒருவரும் மனநல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளானவர்களுக்கு அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பள்ளிகளில் மாணவர்களுக்கு தனியாக ஆலோசனை மையங்களை அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மனநல ஆலோசகர்கள் இல்லாமல் வளர் இளம் பருவத்தினர் நலத்திட்டம் முடங்கி கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:
மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். ஆனால், 10 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் வாழ்க்கையில் திசைமாறி செல்வதற்கு அதிகளவில் வாய்ப்புள்ளது.  எனவே, இந்த வயதினரை சரியான பாதையில் வழிநடத்துவது அவசியம்.  இதனால், வளர் இளம் பருவத்தினருக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குவது அவசியம். ஆனால், மனநல ஆலோசனை வழங்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வளர் இளம் பருவத்தினர் நலத்திட்டமும் போதிய மனநல ஆலோசகர்கள் இல்லாமல் முடங்கி கிடக்கிறது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் சனிக்கிழமைகளில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரையும், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் சனிக்கிழமைதோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும்  வளர் இளம் பருவத்தினருக்கு மனநல ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அரசு மருத்துவமனைகளில் மனநல ஆலோசகர்களும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மனநல பயிற்சி பெற்ற பகுதி சுகாதார செவிலியர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான பணியிடங்கள் காலியாகவே உள்ளது. இதனால் வளர் இளம் பருவத்தினருக்கு உரிய மனநல ஆலோசனை கிடைப்பதில்லை.

குறிப்பாக வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் 19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகளில் இருந்து பாதுகாத்து கொள்வது, போதை பொருளால் ஏற்படும் தீமைகள், பாலியல் கல்வி, தொற்றா நோய்கள் ஆகியன குறித்து பகுதி சுகாதார செவிலியர்கள் ஆலோசனைகள் வழங்க வேண்டும்.  ஆனால் ஆட்கள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பணிச்சுமையை காரணம் காட்டி இதுபோன்ற எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



Tags : National Adolescent Adolescent Welfare Scheme , Psychiatrists, Government Hospital, National Adolescent Adolescent Welfare Program and Social Activists
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்