×

சரணாலய பகுதிக்குள் வருவதால் இழுபறி பேச்சிப்பாறை அணையை தூர்வாருவதில் சிக்கல் தீருமா?: முட்டி மோதும் பொதுப்பணித்துறை - வனத்துறை

நாகர்கோவில்: பேச்சிப்பாறை அணையை தூர்வாருவதில் வனத்துறை, பொதுப்பணித்துறை இடையேயிலான சிக்கல் தீர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தின் உயிர் நாடியாக விளங்குவது பேச்சிப்பாறை அணை. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் கோதையாற்றின் குறுக்கே பேச்சிப்பாறையில் கட்டப்பட்டுள்ள இந்த அணை 48 அடி உயரம் உடையது. 100 சதுர மைல் பரப்பளவு நீர்ப்பிடிப்பு பகுதிகளை கொண்ட இந்த அணை நீரின் மூலம் குமரி மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.  இந்த அணை கட்டுமான பணி 1897ம் ஆண்டு துவங்கி 1908ம் ஆண்டு நிறைவடைந்தது. செங்கல், சுண்ணாம்பு, மணல் போன்றவைகளால் கட்டப்பட்ட பழமையான இந்த அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்துவதோடு அணையில் மறு சீரமைப்பு பணிகள் செய்து பலப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக சட்டமன்றத்திலும் இது சம்பந்தமாக பலமுறை கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.

இந்தியாவிலுள்ள பழமையான பெரிய அணைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பேச்சிப்பாறை அணையை, மத்திய நீர்வள ஆதார துறையின் அணைகள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு குழுவினர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் நேரில் ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் இந்த அணையை உலக வங்கி நிதியுதவியுடன் ரூ. 61 கோடியே 20 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் செய்ய அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாடு திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டது.  இந்த திட்டத்தின்படி அணையின் முன் பகுதியில் சுவரை பலப்படுத்தும் வண்ணம் சாய்வு அணை அமைத்தல், அணை சுவர்களில் நவீன முறையில் ரசாயன கலவை செலுத்தி அணையை பலப்படுத்துதல், மறுகால் மதகுகள், பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் மதகுகள் போன்றவற்றை புதுப்பித்து நவீனப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதோடு 1992ம் ஆண்டு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது திடீரென அணையில் பெருமளவு வெள்ளம் வந்ததால் அதனை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.  இதுபோன்ற காலத்தில் தண்ணீரை எளிதாக வெளியேற்றி அணை முழு பாதுகாப்புடன் இருப்பதற்கு வசதியாக சீரோ பாயிண்ட் பகுதியில் ஏற்கனவே இருக்கும் மறுகால் பகுதியோடு இணைந்துள்ள மேடான பகுதியில் மண் அகற்றப்பட்டு 100 மீட்டர் நீளத்திற்கு 8 மறுகால் மதகுகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால் அணையில் தற்போது தண்ணீரை தேக்கி வைக்க முடிய வில்லை. கடந்த இரு ஆண்டுகளாகவே பேச்சிப்பாறை அணையில் முழு கொள்ளளவை எட்ட முடியாததால் வறட்சி காலங்களில் பாசனத்துக்கே தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.

ஓரளவு நிலைமையை சமாளிக்கும் வகையில் அவ்வப்போது 10 அடி, 15 அடி வீதம் தண்ணீர் தேக்கப்படுகிறது. இந்த புனரமைப்பு பணியில் மிக முக்கியமான பணி அணையை தூர்வாருதல் ஆகும். இந்த அணையின் பெரும்பாலான பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.  இந்த பகுதிகளில் தூர்வாருதல் பணிகளை மேற்கொள்ள வனத்துறையின் அனுமதி தேவைப்படுகிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை சார்பில் வனத்துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஆனால் வனத்துறை இதற்கான அனுமதியை கொடுக்க வில்லை என்றும் கூறப்படுகிறது.  இதனால் அணையை தூர்வாருவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.  இந்த நிலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நாகர்கோவிலில் நேற்று தென் மண்டல வனத்துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் இந்த பிரச்சினை தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது பேசிய, வனத்துறை அலுவலர் ஆனந்த், அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 15 சதுர கிலோ மீட்டர் சரணாலய பகுதிக்குள் வருகிறது. அங்கு தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பாக பொதுப்பணித்துறையிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை  இதுவரை வர வில்லை என்றார். இதை கேட்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதலமைச்சரிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுத்து தூர்வார அனுமதி கொடுக்கப்படும் என்றார். பேச்சிப்பாறை அணை என்பது குமரி மாவட்டத்தின் மிக முக்கியமான அணை ஆகும். இந்த அணை தூர்வாரும் விவகாரத்தில் அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு உடனடியாக பணிகளை மேற்கொண்டு அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sanctuary ,Public Works Department - Forest Department , Sanctuary Area, Peachiparai Dam, Public Works Department, Forest Department
× RELATED கோடியக்கரை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்