மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா அரசின் கோரிக்கையை நிராகரிக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசின் கோரிக்கையை நிராகரிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை  கட்ட கர்நாடக அரசு நீண்ட காலமாக முயன்று வருகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், புதிய அணைக்கான வரைபடத்துடன்  அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி  கோரி, மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. கடந்த 20ம் தேதியன்று அனுப்பப்பட்ட இந்த கடிதத்தில், அந்த கடிதத்தில், 2011ம் ஆண்டு கணக்குப்படி சுமார் 61 லட்சம் மக்கள்தொகை உள்ள பெங்களூரு மாநகர் மற்றும்,  சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்வதற்ககாகவும் மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

இத்திட்டத்தின் மூலம் 400 மெகாவாட் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்து, மாநிலத்தின் மின்தேவையை பூர்த்தி செய்ய முடியும். கர்நாடகாவில் காவிரியும் கிருஷ்ணா நதியும் ஓடுகிறது. இருந்த போதிலும் கர்நாடகா மாநிலத்தில் வறட்சியும்,  மின்சார பற்றாக்குறையும் ஏற்படுகிறது. எனவே மின் பற்றாக்குறை மற்றும் பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கர்நாடகா அரசு, தமிழக எல்லைப்பகுதியை ஒட்டிய மேகதாது அருகே அணை கட்ட முடிவு செய்துள்ளது.  தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177.25 டிஎம்சி தண்ணீர் போக கூடுதல் தண்ணீரை இந்த அணை மூலம் சேமித்து கர்நாடகாவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். மேலும், இந்த மேகதாது அணை திட்டத்தின் மதிப்பீடு ரூ.9,000  கோடியாகும்.

மேகதாது அணைக்காக மொத்தம் 5252.400 ஹெக்டார் நிலம் தேவைப்படுகிறது. 4996 ஹெக்டேர் நிலம் அணையில் நீர் தேக்கவும், 256.40 ஹெக்டார் நிலம் பிற கட்டுமானங்களுக்கும் தேவைப்படுகிறது. இதில் 3181.9 ஹெக்டார் நிலம் காவிரி  வனப்பகுதியிலும், 1869.5 ஹெக்டார் ரிசர்வ் வனப்பகுதியிலும், 201 ஹெக்டார் ரெவென்யூ பகுதியிலும் வருகிறது. புதிய அணையினால் 5 கிராமங்கள் மூழ்கும். மூழ்கும் கிராமங்களில் உள்ளவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டு  அப்புறப்படுத்தப்படுவார்கள். இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதியளிக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேகதாது அணை விவகாரத்தில், தமிழக அரசின் கருத்துகளை கேட்காமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறை அமைச்சகம் கர்நாடகா அரசுக்கு அனுமதியளிக்கக்கூடாது என பிரதமர் மோடிக்கு முதல்வர்  பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும், கடிதத்தில் மேகதாது அணையின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு மற்றும் காவிரி வடிநில மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணை கட்ட  அனுமதிக்க கூடாது. காவிரியில் கர்நாடகா அரசு அணை கட்ட முயற்சிப்பது நடுவர் மன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கானது அல்ல மேகதாது அணை திட்டம் என்றும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு  தமிழ்நாட்டின் அனுமதியை கர்நாடகம் முன்கூட்டியே பெறவில்லை. காவிரியின் மேற்பகுதியில் அணை கட்டினால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை எதிரித்த  வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போதைய சூழலில் கர்நாடகத்தின் காவிரி நீரவாரி நிகம நியமிதா அமைப்பின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். கர்நாடகத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு  உத்தரவிடவும் பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Palanisamy ,government ,Karnataka , Megadadu Dam, Government of Karnataka, PM Modi, Chief Minister Palanisamy, Letter
× RELATED சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும்...