200க்கும் மேற்பட்ட மரங்கள் நட்டு பராமரிப்பு பசுஞ்சோலையாக மாறிய அரசு பள்ளி வளாகம்

* ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்கள் புது முயற்சி

தர்மபுரி :  தர்மபுரி அருகே கடும் வறட்சியிலும், 200 மரங்களையும் 300க்கும் மேற்பட்ட செடிகளையும், தண்ணீர் ஊற்றி அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாத்து வருகின்றனர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரேகடஅள்ளியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 122 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 8 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதில் 14 ஆண்டுகளாக அதே பள்ளியில் தொடர்ந்து 4 ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றனர்.

இவர்கள் இந்த பள்ளியில் புதிதாக பணிக்கு சேர்ந்த போது, ஒரு மரம் மட்டுமே இருந்தது. ஆனால் மரங்களின் அவசியத்தை மாணவர்களுக்கு புரிய வைப்பதற்காக, பல்வேறு ரக மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டு, இன்று பசுமை வனமாக காட்சியளிக்கிறது. தற்போது, 200க்கும் மேற்பட்ட மரங்களும், 300க்கும் மேற்பட்ட செடிகளும் இருப்பதால், வெயில் படாத அளவிற்கு பள்ளி வளாகம் உள்ளது. கடும் வறட்சி நிலவும் சூழ்நிலையில், ரேகடஅள்ளி நடுநிலைபள்ளி வளாகம் மட்டும் பசுஞ்சோலையாக காட்சியளிக்கிறது.

இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘நாங்கள் 14 ஆண்டுகளாக இதே பள்ளியில் பணிபுரிந்து வருகிறோம். முதலில் ஒரு மரம் மட்டுமே இந்த பள்ளியில் இருந்தது. மரங்களின் அவசியத்தை மாணவ, மாணவிகள் உணர வேண்டும் என்பதற்காக, பள்ளி வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு, அதற்கு தண்ணீர் மற்றும் இயற்கை உரம் இட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். வறட்சி காலங்களில், ஒவ்வொரு மாணவர்களும் 2 பாட்டில் தண்ணீர் கொண்டு வர அறிவுறுத்தினோம். இதில் ஒரு பாட்டில் மாணவர்கள் பயன்பாட்டிற்கும், மற்றொரு பாட்டில் தண்ணீர் செடிகளுக்கும் ஊற்றி பாதுகாத்தோம். அப்படி வளர்க்கப்பட்ட மரங்கள் இன்று நன்கு வளர்ந்து அழகாக காட்சியளிக்கிறது,’ என்றனர்.

இதுதவிர, பள்ளியின் சுவர்களில் தேசிய தலைவர்களின் படங்கள், கணிதம், திருக்குறள் என பார்க்கும்  இடமெல்லாம் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வரையப்பட்டு கண்களை கவர்கிறது. தற்போது கடும் வறட்சியான சூழ்நிலையில், டிராக்டர் தண்ணீர் ₹1200 ரூபாய்க்கு வாங்கி, செடிகளுக்கும், மரங்களுக்கும் ஊற்றி காப்பாற்றி வருகின்றனர். மற்ற பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக, மாணவர்களுக்கு டீ சர்ட்களை, ஆசிரியர்களே இலவசமாக வழங்கியுள்ளனர். இப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் மதனகோபால், கடந்த ஆண்டு வங்கி கடன் பெற்று ₹3.75 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு கணினி வாங்கி கொடுத்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.


Tags : Government School Complex ,nursery , Dharmapuri,Government school ,greenhouse , students
× RELATED தர்மபுரி அருகே அரசு பள்ளி வளாகத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர்