சென்னையில் ஒரே நாளில் நடந்த 9 செயின் பறிப்பு சம்பவங்கள்: சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் 9 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதையடுத்து பெண்ணை தாக்கி செயினை பறித்து செல்லும் கொள்ளையர்கள் குறித்த சி.சி.டிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோட்டூர்புறத்தில் உள்ள ஏரிக்கரை சாலையை சேர்ந்த செல்வி என்பவர் அதே பகுதியில் நடந்த திருமணம் ஒன்றிற்கு சென்றுவிட்டு திரும்பிய போது பின்னால் பைக்கில் வந்த இருவர் செல்வியின் கழுத்தில் உள்ள 5 சவரன் செயினை பறித்துள்ளனர். மேலும் அதனை செல்வி தடுக்கும் விதத்தில் செயினை பிடித்துக் கொண்டதால் அவரை முகத்திலேயே தாக்கி விட்டு செயினுடன் இருவர் சென்றனர். இதேபோல ஐஸ்ஹவுஸ் பகுதியில் சுதாதேவி என்ற பெண்ணிடம் பைக்கில் வந்த இருவர் 5 சவர தங்க சங்கிலியை பறித்து விட்டு சென்றனர்.

மேலும் ராயப்பேட்டையில் ஜெயலட்சமி என்பவரிடம் பைக்கில் வந்த இருவர் செயின் பறிக்க முயற்சி செய்தனர். மைலாப்பூர் முண்டகண்ணியம்மன் சாலையில் சாந்தா என்ற மூதாட்டியிடம் 1 சவரன் செயின் என மைலாப்பூர் காவல் மாவட்டத்தில் மட்டும் நேற்று நான்கு செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதேபோல நேற்று பள்ளிக்கரணை பகுதியில் பாலம்மாள் என்ற மூதாட்டியிடம் மூன்றரை சவரன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது. கொடுங்கையூரில் ரமணி என்ற பெண்ணிடம் 3 சவரன் தங்க செயின் பறிக்கப்பட்டது. இதேபோல ஆதம்பாக்கம், திருமங்கலம், எழும்பூர் போன்ற பகுதிகளில் 3 பெண்களிடம் 13 சவரன் செயின் பறிப்பு நடந்துள்ளது.

இன்று கீழ்ப்பாக்கத்தில் சுமிதா என்ற பெண்ணிடம் செல்போன் மற்றும் பணத்தை பைக்கில் வந்த இருவர் பறித்து சென்ற சம்பவமும் நடந்துள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் சி.சி.டிவி கேமராக்கள் அமைக்கப்பட்ட பிறகு இதுபோன்ற செயின் செல்போன் பறிப்புக்கள் குறைந்திருந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் அடுத்தடுத்து நடந்த இதுபோன்ற சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


× RELATED சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது