×

மானாமதுரை பயணிகளுக்கு இடம் கிடைப்பதில்லை செங்கோட்டையிலேயே நிரம்புது சிலம்பு ரயில்

* கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரிக்கை

மானாமதுரை : செங்கோட்டையில் இருந்து மானாமதுரை வழியாக சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் அனைத்தும் செங்கோட்டையிலேயே நிரம்புவதால், மானாமதுரையைச் சேர்ந்த பயணிகளுக்கு அமருவதற்கு இருக்கை கிடைப்பதில்லை. எனவே, கூடுதல் பெட்டிகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ரயில்நிலையம் முக்கிய சந்திப்பாக திகழ்கிறது. ராமநாதபுரம், விருதுநகர், மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களின் எல்லைகளுக்கு அருகில் இருப்பதால், மூன்று மாவட்ட மக்களும் மானாமதுரைக்கு வருகின்றனர்.

இங்கிருந்து மதுரை, ராமேஸ்வரம், விருதுநகர், திருச்சி மார்க்கத்திற்கு ரயில்பாதைகள் பிரிந்து செல்கின்றன. தென்மாவட்டங்களுக்கு வரும் பெரும்பாலான ரயில்கள் மானாமதுரை சந்திப்பை கடந்துதான் செல்ல வேண்டும். ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக செல்லும் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், சிவகங்கை மாவட்ட பயணிகளுக்கு போதிய இடம் கிடைப்பதில்லை. மேலும், மதுரை ரயில்வே கோட்டத்தின் அருகில் உள்ள சந்திப்பு என்பதால், மானாமதுரையில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2013 ஜூன் முதல் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு வாரம் இருமுறை இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2017 மார்ச் 5ம் தேதியில் இருந்து செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. செங்கோட்டையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வரும் நிலையில், சிலம்பு எக்ஸ்பிரசும் நீட்டிக்கப்பட்டதால் முன்பதிவு, அல்லாத பெட்டிகளில் நெல்லை, விருதுநகர் மாவட்ட பயணிகள் ஏறிவிடுகின்றனர். இதனால் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி பயணிகள் அமர்வதற்கு இருக்கை கிடைப்பதில்லை. இதனால், முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் கழிப்பறை அருகே நின்று கொண்டு பயணிக்கும் நிலை உள்ளது. எனவே, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மானாமதுரை பயணிகள் சத்யநாராயணன், கோபி ஆகியோர் கூறுகையில்., சிலம்பு ரயிலில் இரண்டு அடுக்கு ஏசி பெட்டி ஒன்று, மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள் இரண்டு, முன்பதிவு பெட்டிகள் ஆறு, முன்பதிவில்லா பெட்டிகள் ஆறு, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், சரக்கு வேகனுடன் இணைந்த இரண்டு முன்பதிவில்லா பெட்டிகள் என 17 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.மானாமதுரையில் இருந்து இயக்கப்படும்போது சராசரியாக ரூ.50 ஆயிரம் வருவாய் கிடைத்தது. இந்த ரயிலில் செல்ல ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்தும் பயணிகள் வந்தனர்.

ஏற்கனவே, மானாமதுரையில் கூட்டம் அலைமோதும். இந்த ரெயிலை செங்கோட்டை வரை நீட்டித்ததால், மேலும் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக செங்கோட்டை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் இந்த ரெயிலில் ஏறுவதால் மானாமதுரை சுற்றுவட்டார பயணிகள் அமருவதற்கு இடம் கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், மானாமதுரையில் இருந்து இயக்கப்பட்டபோது ஆன்லைனில் முன்பதிவு இருக்கைகளின் எண்ணிக்கை 250 ஆக இருந்தது. தற்போது இதனையும் 99 ஆக குறைத்துள்ளது ரயில்வே நிர்வாகம். இதனால் மானாமதுரையில் இருந்து செல்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் வேண்டுமென்றே குறைக்கப்பட்டுவிட்டது. எனவே, மானாமதுரை பயணிகளின் வசதிக்காக கூடுதல் முன்பதிவில்லாத, முன்பதிவு பெட்டிகளை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்க வேண்டும்’ என்றனர்.

Tags : travelers ,Manamadurai , Silambu Express, Train Ticket, Manamadurai, Karaikudi, Sengottai, Unreserved
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...