×

விளம்பர பலகை மாட்ட ஆணி அடித்து மரங்களை நாசமாக்கும் நிறுவனங்கள்.

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை பகுதியில் உள்ள சாலையோர மரங்கள் மீது தனியார் நிறுவனத்தினர் ஆணி அடித்து தங்களது விளம்பர போர்டுகளை மாட்டி வைக்கின்றனர். இதனால் மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இயற்கை வளங்களை அழிக்கும் தனியார் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல்-கரூர் மாநில நெஞ்சாலையின் மையப்பகுதியில் குஜிலியம்பாறை அமைந்துள்ளது. குஜிலியம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பாளையம், டி.கூடலூர், கோவிலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் திண்டுக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களின் சுயலாபத்திற்காக, சமூக நலனில் அக்கறையில்லாமல் வியாபார நோக்குடன் திண்டுக்கல்-கரூர் மாநில நெஞ்சாலையில் குஜிலியம்பாறை வழித்தடத்தில் உள்ள சாலையோர மரங்கள் மீது ஆணி மற்றும் இரும்பு போல்ட் ஆகியவை மூலம் துளையிட்டு தங்களின் நிறுவன விளம்பர போர்டுகளை வைத்துள்ளனர். இதனால் மரங்களின் வளர்ச்சியில் பாதித்து பட்டுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மக்கள் கூறுகையில், ‘‘மரங்களை பாதுகாப்பது குறித்தும், மரங்களை நடுவது குறித்தும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கல்வி நிறுவனங்களே, மரங்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக தங்களின் வியாபார நோக்கிற்காக விளம்பர போர்டுகளை மரங்கள் மீது துளையிட்டு வைத்துள்ளது வேதனை அளிக்கும் விஷயமாகும். எனவே குஜிலியம்பாறை மற்றும் திண்டுக்கல்- கரூர் மாநில நெஞ்சாலையில் உள்ள சாலையோர மரங்கள் மீது துளையிட்டு வைத்துள்ள விளம்பர போர்டுகளை அகற்றி மரங்களை பாதுகாக்கவும், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Companies , gujilamparai,Advertisement ,Trees
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!