×

பேச்சுரிமை என்றாலும் ஒரு வரம்பு இல்லையா? இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி..வழக்கை ரத்து செய்யவும் மறுப்பு

மதுரை: ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சை விதமாக பேசிய விவகாரத்தில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 5ம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்போது மன்னர் ராஜராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்தார். ராஜராஜ சோழன் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட நிலம் பறிக்கப்பட்டது என பேசியிருந்தார். மேலும் அவரது காலம் இருண்ட காலம் எனக் கூறியிருந்தார். சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் அவரது ஆட்சி காலத்தில் தான் தொடங்கியது என்ற குற்றசாட்டை ரஞ்சித் முன்வைத்திருந்தார். மேலும் தான் ஒரு ஜாதி வெறியன் என்றும் அறிவித்துக்கொண்ட பா.ரஞ்சித், மாட்டை நீங்கள் கடவுளாக கும்பிட்டால், அந்த கடவுளையே சாப்பிடுபவன் நான் என்றும் காரசாரமாக பேசியிருந்தார்.

இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் இயக்குநர் ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் கைது நடவடிக்கைக்கு அஞ்சிய இயக்குநர் ரஞ்சித் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இரண்டு முறை ரஞ்சித்தை கைது செய்ய தடை விதித்த நீதிமன்றம் மூன்றாவது முறை மறுப்பு தெரிவித்துவிட்டது.  வழக்கை ஒத்திவைத்தது. இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ரஞ்சித் தரப்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜ ராஜ சோழன் தலித் நிலங்களை பறித்தார் என்று எந்த நோக்கத்தில் கூறப்பட்டது? தலித் மக்களின் நிலத்தை பறித்தார் என்பதற்கு ஆதாரம் எங்குள்ளது? ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை என்றாலும் ஒரு வரம்பு இல்லையா? என்று பா.ரஞ்சித்துக்கு சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதி, பயிர் செய்வோர் நிலத்தை சொந்தமாக வைத்திருக்கலாம், பயிர் செய்யாதோர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றுதான் நூலில் உள்ளது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ரஞ்சித்தின் உரை முழுவதையும் உயர்நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.


Tags : Saramari ,Director P Ranchichu , Pa. Ranjith, Raja Raja Cholan, High Court Branch
× RELATED கொரோனா பாதிப்பு மேலும் பரவாமல் இருக்க...