கோவை அருகே இரண்டரை வயது பெண் குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு: சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

கோயம்புத்தூர்: கோவை விளாங்குறிச்சியில் தாயுடன் இரவு உறங்கி கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை காலை வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை அன்னூரில் கனகராஜ் என்பவர் ஜே.சி.பி இயந்திரம் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருகிறார். இதையடுத்து அவரது மனைவி காஞ்சனா மற்றும் இரண்டரை வயது பெண் குழந்தை அம்ரிதா இருவரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் காஞ்சனாவின் தாய்வீடான  விளாங்குறிச்சிக்கு வந்துள்ளனர். மேலும் வீட்டில் காஞ்சனாவின் தந்தை, சகோதரர், சகோதரி ஆகியோர் இருந்த நிலையில் இரவில் காஞ்சனா அருகில் குழந்தை அம்ரிதா உறங்கி கொண்டிருந்தது.

இதையடுத்து காலை 4.30 மணி அளவில் பால்காரர் வந்து எழுப்பிய போது தன் பக்கத்தில் படுத்திருந்த குழந்தையை காணவில்லை என்று காஞ்சனா கூச்சல் போட்டுள்ளார். இதை தொடர்ந்து வீட்டிலிருந்த அனைவரும் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்து குழந்தை கிடைக்காததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வந்து பார்த்த போது வீட்டின் எதிரே புதர் மண்டிய பகுதியில் உள்ள பாழுங்கிணறு ஒன்றில், வாயில் நுரை தள்ளிய நிலையில் குழந்தை அம்ரிதா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்ந்து குழந்தை இறந்தது எப்படி? என்பதை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : Coimbatore , Coimbatore, two and a half years old, baby girl, well, corpse, rescue, police, investigation
× RELATED நாகை மாவட்டம் வேதராண்யம் அருகே 13 வயது...